| 
 
702. எண்ணாரெயில்கண் மூன்றுஞ்சீறு மெந்தைபிரா னிமையோர் கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதல் நண்ணுமிடம் மண்ணார்சோலைக் கோலவண்டு வைகலுந் தேனருந்திப் பண்ணார்செய்யும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே. 2 703. மங்கையங்கோர் பாகமாக வாணில வார்சடைமேற் கங்கையங்கே வாழவைத்த கள்வ னிருந்தவிடம் பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர் பொய்கையின்மேற் பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே. 3 __________________________________________________ 2.  பொ-ரை: பகைவராய
அசுரர்களின் கோட்டைகளாய திரிபுரங்களைச் சினந்தழித்த
எந்தையாகிய பெருமானும், தேவர்களின் கண்களாய்
விளங்குவோனும், இவ்வுலகைக் காக்கின்ற கண்ணுதலும்
ஆகிய சிவபிரான் மேவிய இடம், நன்கு அமைக்கப்பட்ட
சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனுண்டு
இசை பாடும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும். கு-ரை: முப்புரஞ்சீறிய முதல்வன் தேவர்கட்குக்
கண்ணாய் உலகம்காக்கும் கண்ணுதலும் ஆவான்; அவனது
இடம் இது என்கின்றது. எண்ணார் - பகைவர். கண்ணுதல்
- சிவன். மண் - பூமி. மண்ணுதல் - உண்டாக்குதல். பண்
ஆர் செய்யும் - பாடும். 3.  பொ-ரை: உமையம்மையை ஒரு பாகமாகக்
கொண்டு ஒளி பொருந்திய பிறை தங்கிய சடையின்மேல்
கங்கை நங்கையையும் வாழ வைத்துள்ள கள்வனாகிய சிவபிரான்
எழுந்தருளிய இடம், மிக்க ஆழமான கடலினது வெள்ள
நீரால் தானும்மேலே உயர்ந்துள்ள நீர் நிலையாகிய
பொய்கைகளில் தாமரை மலர்கள் பூத்துள்ள
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனரச்சரமாகும். |