பக்கம் எண் :

830திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


74, திருப்புறவம்

பண்; தக்கேசி

பதிக எண்: 74

திருச்சிற்றம்பலம்

798. நறவநிறைவண் டறைதார்க்கொன்றை

நயந்து நயனத்தாற்

சுறவஞ்செறிவண் கொடியோனுடலம்

பொடியா விழிசெய்தான்

புறவமுறைவண் பதியாமதியார்

புரமூன் றெரிசெய்த

இறைவன்அறவ னிமையோரேத்த

வுமையோ டிருந்தானே. 1

____________________________________________________

1. பொ-ரை: தேன்நிறைந்த வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலையை விரும்பிச்சூடி, சுறாமீன் எழுதப்பட்ட கொடியை உடைய, உயிர்கட்கு எல்லாம் இன்ப நலம் தரும் வள்ளன்மை உடைய, மன்மதனைப் பொடியாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்து அழித்த, சிவபிரான் உறையும் பதி புறவம் எனப்பெறும் சீகாழியாம். தன்னை மதியாத அசுரர்களின் முப்புரங்களை எரித்தழித்த அவ்விறைவனாகிய அறவன் இமையவர் ஏத்தித் துதிக்க அப்பதியிடை உமையம்மை யோடு வீற்றிருந்தருள்கிறான்.

கு-ரை: மகரக்கொடியோனாகிய மன்மதனது உடலத்தைப் பொடி செய்தவரும். திரிபுரம் எரித்தவரும் ஆகிய உமாபதிநகர் புறவம் என்னும் சீகாழியாம் என்கின்றது. நறவம் - தேன். அறை - ஒலிக்கின்ற. நயந்து -விரும்பி. நயனத்தால் - கண்ணால். சுறவம் செறி வண் கொடியோன் - சுறாமீன் எழுதப்பட்ட கொடியை உடையவனாகி்ய மன்மதன். நயனத்தால் விழித்தலைச் செய்தான் என்க. மதியார் - பகைவர்.

குருவருள்: நறவம் நிறை வண்டறை தார் என்ற பதிகம் ஞானசம்பந்தர் "தோடுடைய செவியன்" பாடியபிறகு உடன் கோயிலினுட் சென்று உமாமகேசுரரைத் தரிசித்துப் பாடியது. இரண்டாம் பதிகம் "மடையில் வாளை" என்பதாகவே கற்றோரும் மற்றோரும் எண்ணி வருகின்றனர். இது பொருந்தாது என்பதைப் பின்வரும் சேக்கிழார் வாக்கால் தெளியலாம்.