905. பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
அண்ணா மலைநாட னாரூ ருறையம்மான்
மண்ணார் முழவோவா மாடந் நெடுவீதிக்
கண்ணார் கடனாகைக் காரோ ணத்தானே. 2
904. பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதின்மூன்றும்
ஆரா ரழலூட்டி யடியார்க் கருள்செய்தான்
தேரார் விழவோவாச் செல்வன் றிரைசூழ்ந்த
காரார் கடனாகைக் காரோ ணத்தானே. 3
____________________________________________________
2. பொ-ரை: பெண்ணும் ஆணுமாய்
ஓருருவில் விளங்கும் பெருமானும், பிறை சூடிய சென்னியனாய்
அண்ணாமலை ஆரூர் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய
தலைவனும் ஆகிய சிவபிரான் மார்ச்சனை பொருந்திய
முழவின் ஒலி இடைவிடாமல் கேட்கும், மாட வீடுகளுடன்
கூடிய நெடிய வீதிகளை உடைய அகன்ற இடப் பரப்புடைய
கடலையடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளி
யுள்ளான்.
கு-ரை: சிவமும் சத்தியுமாக நின்றவன், அண்ணாமலையான், ஆரூருறைவான காரோணத்தானே என்கின்றது.
திருமாலின் தருக்கொழித்த தலங்கள் மூன்றினையும்
சேர்த்துக்கூறியருளினார். திருவாரூரில் வில்நாணைச்
செல்லாக அரித்து நிமிர்த்தி திருமால் சிரத்தையிடறினார்;
திருவண்ணாமலையில் தீமலையாய் நின்று செருக்கடக்கினார்;
நாகையிலும் தியாகர் திருவுருவில் இருந்து திருமாலின்
தியானவஸ்துவானார் என்பதுமாம். மண் - மார்ச்சனை
என்னும் மண். கண் - இடம்.
3. பொ-ரை: மண்ணக மக்கள் தொழவும், விண்ணவர்
பணியவும் அனைவர்க்கும் நெருங்குதற்கரிய
அழலை ஊட்டி அழித்து அடியவர்க்கு அருள் செய்து, தேரோட்டமாகிய
சிறப்பு விழா இடைவிடாது நிகழும்சிறப்பினை ஏற்றருளும்
செல்வன் ஆகிய சிவபெருமான், அலைகள் நிரம்பிய, மேகங்கள்
பொருந்திய கடலின் கரையில் விளங்கும் நாகைக்
காரோணம் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: திரிபுரம் எரித்த செயல் விண்ணவர்
மண்ணவர் அடியார் எல்லாரும் மகிழுஞ் செயலாயிற்று
என்பது உணர்த்துகின்றது ஆரார் - பகைவர். காரார்கடல்
- கரியகடல்.
|