பக்கம் எண் :

932திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


89. திருஎருக்கத்தம்புலியூர்

பதிக வரலாறு:

பொன்னம்பலந் தொழுது போந்த புகலிப்பிள்ளையார் திருமுன்பு சென்று, திருநீலகண்ட யாழ்ப்பாணர், ‘அடியேன் பதி முதலியவற்றையும் வணங்கிப் போதல்வேண்டும்’ என்று விண்ணப்பிக்க, பிள்ளையார் அங்ஙனமே தந்தையார் பரிசனங்கள், பாணர் மதங்கசூளாமணியார் இவர்களுடன் நிவாநதியின் கரைவழியே, மேற்றிசையிற்போய்த் திரு எருக்கத்தம்புலியூரை அடைந்தர்.

அப்போது பாணனார் இது ‘அடியேன் பதி’ என விண்ணப்பித்துக்கொள்ள, புகலிவேந்தர் பெரிதும் விருப்புற்று எழுந்தருளினார். திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டுப் "படையார் தரு" என்னும் இப்பதிகத்தை அருளிச்செய்தார்.

பண் : குறிஞ்சி

பதிக எண்: 89

திருச்சிற்றம்பலம்

959. படையார் தருபூதப் பகடா ருரிபோர்வை
உடையா னுமையோடு முடனா யிடுகங்கைச்
சடையா னெருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
விடையா னடியேத்த மேவா வினைதானே. 1

____________________________________________________

1. பொ-ரை: படைகளாக அமைந்த பூத கணங்களை உடையவனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், உமையம்மையோடு உடனாய் விளங்குபவனும், வந்து பொருந்திய கங்கையை ஏற்ற சடையை உடையவனும் ஆகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் தகுதி வாய்ந்த கோயிலில் எழுந்தருளிய விடை ஏற்றை உடைய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை, வினைகள் வந்து சாரா.

கு-ரை: பகடு ஆர் உரி - யானையின் தோல். மேவா - தம் வலிமையைக்காட்டா.