பக்கம் எண் :

954திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


93. திருமுதுகுன்றம்

பதிக வரலாறு:

12-ஆம் பதிகம் பார்க்க.

திருவிருக்குக்குறள்
பண்: குறிஞ்சி

பதிக எண்:93

திருச்சிற்றம்பலம்

1003. நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை
நன்று மேத்துவீர்க், கென்று மின்பமே. 1

1004. அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர்
நித்த மேத்துவீர்க், குய்த்தல் செல்வமே. 2

1005. ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர், வைய முமதாமே. 3

___________________________________________________

1. பொ-ரை: இன்றே திருமுதுகுன்றம் சென்று, அங்குள்ள இறைவரை மலரால் அருச்சித்து நின்று நல்லமுறையில் துதிப்பீராயின் உமக்கு எக்காலத்தும் இன்பம் உளதாம்.

கு-ரை: இன்றைக்கே முதுகுன்றை மலர்தூவி ஏத்தும் உங்களுக்கு என்றைக்கும் இன்பமாம் என்கின்றது. ஒருநாள் வழிபாட்டிற்கு நிலைத்த இன்பம் வரும் என்கின்றது.

2. பொ-ரை: நீர் திருமுதுகுன்றத்துத் தலைவனாய் விளங்கும் இறைவன்மீது பக்தி செலுத்தி நாள்தோறும் வழிபட்டு வருவீராயின் உமக்குச் செல்வம் பெருகும்.

கு-ரை: உய்த்தல் செல்வமே - பொருந்துதல் செல்வமேயாகும் என்றது பொருள் பெருகும் என்பதாம்.

3. பொ-ரை: திருமுதுகுன்றத்துள் விளங்கும் தலைவனாகிய சிவபிரானை நீர் பலவகையான பொய்கள் இன்றி மெய்மையோடு நின்று. கைகளைக் கூப்பி வழிபடுவீர்களாயின் உலகம் உம்முடையதாகும்.