2533.
|
வெயிற்கெதிர்ந்
திடங்கொடா
தகங்குளிர்ந்த பைம்பொழில்
துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள்
மல்குதண் துருத்தியாய்
மயிற்கெதிர்ந் தணங்குசாயன்
மாதொர்பாக மாகமூ
வெயிற்கெதிர்ந் தொரம்பினால்
எரித்தவில்லி யல்லையே. 6 |
2534.
|
கணிச்சியம்
படைச்செல்வா
கழிந்தவர்க் கொழிந்தசீர்
துணிச்சிரக் கிரந்தையாய்
கரந்தையாய் துருத்தியாய்
அணிப்படுந் தனிப்பிறைப்
பனிக்கதிர்க் கவாவுநல்
மணிப்படும்பை நாகநீ
மகிழ்ந்தவண்ண லல்லையே. 7 |
6. பொ-ரை:
வெயிலை எதிர்த்து அதற்கு இடம் கொடாது அகம்
குளிர்ந்த பைம் பொழிலில் துயிலாதனவாய்ப் பறவை இனங்கள் நிறைந்து
வாழும் தண்மையான திருத்துருத்தியில் எழுந்தருளிய இறைவனே!
மயிலொடு மாறுபட்டு அழகால் அதனை வருந்தச் செய்யும் அழகினை
உடைய உமைபாகராக மூவெயில்களை எதிர்த்து அவற்றை ஓரம்பினால்
எரித்த சிறந்த வில்லாளி யல்லையோ நீ!
கு-ரை:
துருத்தியில் உள்ள சோலைவளம் கூறியவாறு. வெயிலுக்கு
எதிர்த்து இடம் கொடாது குளிர்ந்த சோலை இப்பொழுதும் உண்டு.
அணங்கு-அழகு.
7. பொ-ரை:
மழுப்படையினை உடைய செல்வரே! பல்லூழிக்
காலங்களில் அழிந்தொழிந்த சிறப்பினராகிய திருமால் பிரமர்களுடைய
தலையோடுகளைக் கட்டிய முடிச்சுடையவரே! கரந்தை சூடியவரே,
திருத்துருத்தியில் உறைபவரே! அழகியதும் ஒப்பற்றதுமான இளம்பிறையின்
குளிர்ந்த நிலவொளியை அவாவும், நல்ல மணியை உடைய படப்பாம்பை
ஒருங்கே அணிந்த தலைமையாளர் அல்லிரோ நீர்.
|