2188.
|
ஆற்ற லடல்விடை
யேறு
மால வாயான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும்
பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற
தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும்
வல்லவர் நல்லவர் தாமே. 11
திருச்சிற்றம்பலம்
|
11.
பொ-ரை: ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும்
உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப்
புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத்
தெளிவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு
சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார்.
கு-ரை:
ஆற்றல் - வலிமை. அடல் - கொலை. இரண்டும்
உடையது விடை. ஆலவாயான் திருநீற்றைப் போற்றி-முதற் பத்துப்
பாக்களால் திருவாலவாய்ச் சிவனுடைய திருநீற்றைத் துதித்து. புகலி -
சீகாழி. பூசுரன் - பூமியிலுள்ள தேவர். தேற்றி - சைவத்தின் மாண்பைத்
தெரிவித்து. தென்னன் - கூன்பாண்டியன். தீ பிணி - தீமையை
விளைவிக்கும் நோய்கள். வல்லவர் எழுவாய்; நல்லவர் பயனிலை.
|
திருஞானசம்பந்தர்
புராணம்
தென்னவன்
நோக்கங் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர்
அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே
மன்னுமந் திரமு மாகி மருந்துமாய்த் தீர்ப்ப தென்று
பன்னிய மறைகள் ஏத்திப் பகர்திருப் பதிகம் பாடி.
-சேக்கிழார்.
|
|