பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)102. திருநாரையூர்1179

102.திருநாரையூர்

பதிக வரலாறு:

      திருவாழ்கொளிபுத்தூர், திருக்கடம்பை ஆகிய தலங்களை வழிபட்டு
வருங்கால், திருநாரையூரின் நம்பரைக் கும்பிடும் விருப்பொடு குறுகிக்கூடிய,
எம்பிரான் கவுணியர் தலைவர், பாடியருளிய வம்பலர் செந்தமிழ் மாலை,
இத் திருப்பதிகம்.

பண்: பழம்பஞ்சுரம்

ப. தொ. எண்: 360 பதிக எண்: 102

 திருச்சிற்றமலம்

3890. காம்பினை வென்றமென் றோளி பாகங்
       கலந்தா னலந்தாங்கு
தேம்புனல் சூழ்திகழ் மாமடு விற்றிரு
     நாரை யூர்மேய
பூம்புனல் சேர்புரி புன்ச டையான்
     புலியின் னுரிதோன்மேல்
பாம்பினை வீக்கிய பண்ட ரங்கன்
     பாதம் பணிவோமே.                    1


     1.பொ-ரை:சிவபெருமான், மூங்கிலைப் போன்ற தோளையுடைய
உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர். நலம் தரும் இனிய நீர்
சூழ்ந்த சிறந்த நீர்நிலைகளையுடைய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில்
விரும்பி வீற்றிருந்தருளுபவர். அழகிய கங்கையையும், முறுக்குண்ட சிவந்த
சடையையுமுடையவர். புலித்தோலாடை அணிந்தவர். பாம்பைக் கச்சாகக்
கட்டியவர். பண்டரங்கன் என்னும் திருப் பெயர் உடையவர். அத்தகைய
சிவபெருமானின் திருப்பாதங்களை நாம் பணிவோமாக.

     கு-ரை:காம்பினை வென்ற மென்தோளி - மூங்கிலை வென்ற
மெல்லிய தோளையுடைய உமாதேவியார். மென்மைத் தன்மையால்
வென்றதென்பதற்கு ‘மென்தோளி’ என்றார்; தேம் புனல் - இனிய நீர்
சூழ்ந்த சிறந்த பெரிய மடுக்களையுடைய திருநாரையூர். பூம் புனல் -
மெல்லிய கங்கை நீர் தங்கிய. புரி - முறுக்கிய. புன் சடையான் - சிறு