பக்கம் எண் :

1256திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

112. திருப்பல்லவனீச்சரம்

பதிக வரலாறு:

      திருஞானசம்பந்தர், பல்லவனீச்சரத்தில், பாம்பணிந்த சாம்பசிவ
மூர்த்தியை ஏத்திப் பாடியருளியது இவ்விசைப் பதிகம்.

ஈரடி
பண்: பழம்பஞ்சுரம்

ப.தொ.எண்: 370 பதிகஎண்: 112

 திருச்சிற்றம்பலம்

4001. பரசுபாணியர் பாடல்வீணையர்
       பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தரசுபேணி நின்றார்
     இவர்தன்மை யறிவாரார்.                1

4002. பட்டநெற்றியர் நட்டமாடுவர்
       பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திட்டமா யிருப்பார்
     இவர்தன்மை யறிவாரார்.               2


     1. பொ-ரை: சிவபெருமான் மழுப்படையைக் கையில் ஏந்தியவர்.
வீணையில் பாட்டிசைப்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில்
ஆட்சி புரிந்து அருள்புரிபவர். இவரது தன்மை எத்தகையது என்பதை யார்
அறிவார்? ஒருவரும் அறியார்.

     கு-ரை: பரசு பாணியர் - பரசு என்னும் ஆயுதத்தைக் கையில்
ஏந்தியவர். பாடல் வீணையர் - பாடுதலுக்குரிய கருவியாகிய வீணையை
உடையவர் என்றது ஒன்றோடொன்று மாறுபட்ட தன்மையை உடையவர்.
ஆகையினால் இவர் தன்மை அறிவார் யார் என்றார்.

     2. பொ-ரை: தலைமைப் பட்டத்திற்குரிய அடையாள அணிகலன்
அணிந்த நெற்றியர். திருநடனம் செய்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர்.