பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள்187

     தமிழ் மொழியை ஆராய்ச்சிசெய்ய நிலைக்களமானது.
சங்கப்பனுவலாகிய பரிபாடலில், மதுரைக்கும் வையைக்கும் முப்பது
பாடல்களைக் காணலாம். இங்குச் சிவபெருமான் செய்தருளிய அறுபத்து
நான்கு திருவிளையாடல்களைப்போல வேறு எங்கும் நிகழ்ந்திலது. திருஞான
சம்பந்தர், திருநாவுக்கரசர் இவர்களுடைய பதினொரு பதிகங்களைக்
கொண்டது.

     திருஞானசம்பந்தப் பெருந்தகையார் அனல்வாதம் புனல்வாதம் செய்து
சைவத்தைப் பாண்டிநாட்டில் நிலை பெறச்செய்த பதி, முத்திதரும் தலங்கள்
ஏழனுள் ஒன்றாய் விளங்குவது. ஐந்து சபைகளுள் வெள்ளியம் பலத்தைக்
கொண்டது. மூர்த்தி நாயனார் அவதரித்த திருப்பதி. மாணிக்கவாசகரது
பெருமையை அரிமர்த்தன பாண்டியனுக்கு அறிவுறுத்தி அவனை உய்விக்கச்
செய்வதற்காக, நரி பரி ஆக்கியது, பரி நரியாக்கியது முதலான திரு
விளையாடல்களைச் செய்தருளிய தலம்.

     1. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்: இது வேம்பத்தூரார்
திருவிளையாடல் எனவும், பழைய திருவிளையாடல் எனவும் வழங்கப்பெறும்.
இது ஆராய்ச்சிக்குச் சிறந்த நூல். இதை ஆக்கியோர் செல்லிநகர்ப்
பெரும்பற்றப்புலியூர் நம்பியாவர்.

     2. கடம்பவன புராணம்: இது தொண்டைநாட்டிலுள்ள இலம்பூரிலிருந்த
வீமநாத பண்டிதரால் இயற்றப்பெற்றது.

     3. சுந்தரபாண்டியம்: இது தொண்டைநாட்டிலுள்ள வாயிற்பதியிலிருந்த
அனதாரியப்பரால் எழுதப்பெற்றது.

     4. திருவிளையாடற் புராணம்: இது திருமறைக்காட்டிலிருந்த பரஞ்சோதி
முனிவரால் இயற்றப்பெற்றது. இது சமய வளர்ச்சிக்கும் தமிழ்வளர்ச்சிக்கும்
பெரிதும் பயன்படுவது. இது தோன்றிய பின்னர், இத்தலத்திற்குரிய வேறு
புராணங்களை மக்கள் விரும்பிப் படிக்காததே இதன் பெருமையை
உணர்த்துவதாகும். சங்கநூல் அறிவுசான்ற திரு. ந.மு. வேங்கடசாமி
நாட்டாரவர்கள் இதற்குச் சிறந்த உரையெழுதியுள்ளார்கள்.

     5. திருவிளையாடல் போற்றிக்கலி வெண்பா:

     6. மதுரை பதிற்றுப்பத்தந்தாதி: இவ்விரு நூல்களும் மேற்குறித்த
பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பெற்றனவாகும்.