பக்கம் எண் :

420திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2833. புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
  விண்ணவர் அடிதொழ விளங்கினானை
நண்ணிய ஞானசம் பந்தன்வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்
     நடலையவை இன்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம்
     இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே. 11

திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: சிவபுண்ணியர்கள் வணங்குகின்ற திருப்புகலிப் பதியில்,
விண்ணவர்களும் தன் திருவடிகளைத் தொழும்படி விளங்கும்
சிவபெருமானை, மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒன்றுபடப் போற்றிய
திருஞானசம்பந்தனின் அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓதவல்லவர்கள்
எவ்வித இடர்களுமின்றித் தவநெறியில் நின்று, பிறவித் துன்பத்தினின்றும்
நீங்கிச் சிவனுலகம் அடைவர்.

     கு-ரை: நடலையவை-பிறவித் துன்பங்கள்(அவை-பகுதிப் பொருள்
விகுதி) மேல் வைப்பு ஆகிய இரண்டிற்கும்-அருந் தமிழ் பத்தும்
வல்லார்பக்குவராயின் சிவனுலகம் நண்ணுவர்; அபக்குவராயின் தவநெறி
யெய்துவர். அதன் பயனாகச் சிவனுலகமும் நண்ணுவர் என
அடிமாற்றியுரைப்பினுமாம். திருஞானசம்பந்தர் புராணம்

     தோணிவீற் றிருந்தார் தம்மைத் தொழுதுமுன் நின்று தூய
     ஆணியாம் பதிகம் பாடி அருட்பெரு வாழ்வு கூரச்
     சேணுயர் மாடம் ஓங்குந் திருப்பதி யதனிற் செய்ய
     வேணியார் தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார்.

                                           -சேக்கிழார்.