பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)20. திருப்பூவணம்541

3018. மண்டைகொண் டுழிதரு மதியில் தேரரும்
  குண்டருங் குணம்அல பேசுங் கோலத்தர்
வண்டமர் வளர்பொழின் மல்கு பூவணம்
கண்டவ ரடிதொழு தேத்தல் கன்மமே.       10

3019. புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை
  அண்ணலை யடிதொழு தந்தண் காழியுள்
நண்ணிய அருமறை ஞானசம் பந்தன்
பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே.     11

திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: மண்டை என்னும் ஒருவகைப் பாத்திரத்தை ஏந்திப்
பிச்சையெடுத்துத் திரிகின்ற புத்தர்களும், சமணர்களும், இறையுண்மையை
உணராது கூறும் பயனற்ற பேச்சைக் கேளாது, வண்டுகள் மொய்க்கின்ற
வளமுடைய சோலைகள் நிறைந்த திருப்பூவணம் என்னும் திருத்தலத்தைத்
தரிசித்து அங்கு வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது
போற்றுதல் நம் கடமையாகும்.

     கு-ரை: மண்டை - ஒருவகைப் பாத்திரம். வாய்பாடு இல்லாதது.
உழிதரு தேரர் - அலைந்து திரிகின்ற தேரர், புத்தர். குண்டர் -
போக்கிரிகள். குணம் அல பேசுங்கோலத்தர் - பயனில்லாத பேசுங்
கோலத்தையுடையவர்கள். திருப்பூவணத்தைத் தரிசித்து அவருடைய
அடியைத் தொழுது துதிப்பது. கன்மம் - காரியம். நமது கடமையாகும்.
“தன்கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே”
என்ற அப்பர் சுவாமிகள் வாக்காலும் அறிக. நான்காம் அடிக்குப் பூவணம்
கண்டு அவர் அடிதொழுது என்க.

     11. பொ-ரை: புண்ணியர்கள் தொழுது போற்றுகின்ற திருப்பூவணம்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற தலைவரான சிவபெருமானின்
திருவடிகளைத் தொழுது போற்றி, அழகிய, குளிர்ச்சியான சீகாழியில்
அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாடல்களை
ஓதவல்லவர்களின் பாவம் யாவும் நீங்கும்.

     கு-ரை: பண்ணிய - செய்த; இயற்றிய. “புகழ்கொண்டு மற்றிவர்
செய்யும் உடம்பு” என்பதனாலும்: செய்யுள் என்னும் பெயராலும் அறிக.
பறையும் - வெளிக்கிளம்பி நீங்கும் “பறையும் பாவங்களான” என்ற
சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாக்கினாலும் அறிக.