இந்த அருமையான சோதனையில் ஸ்ரீ சொக்கலிங்கப் பெருமான் திருவருளும், ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களின் திருவருளும், திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவடித் துணையும் கொண்டு வெற்றி பெற்றுள்ளார் உரையாசிரியர் முதுபெரும் புலவர் திரு. முத்து. சு.மாணிக்கவாசக முதலியார் அவர்கள். இத் திருமுறைப் பணியில் இவ்வுரையாசிரியர் தூங்காமற் சிந்தனையோடு கழித்த இரவுகள் பலப்பல. சிந்தனை தோய்ந்த முகத்தோடு, எஞ்ஞான்றும் காட்சியளித்த பகல்களும் பலப்பல. அல்லும் பகலும் அப்பரடிகள் அருளமுதத்தில் தோய்ந்து, சொல்லுக்குச் சொல், தொடருக்குத் தொடர், பாடலுக்குப் பாடல் ஆழ்ந்து ஆழ்ந்து கருத்து முத்துக்களை எடுத்தெடுத்து இனிய கோவையாக்கி இஞ்ஞான்று சொக்கலிங்கப் பெருமான் திருவடிகளில் அம் முத்துக் கோவையைச் சூட்டுமளவுக்கு இவ்வுரையாசிரியர் பெரும்பேறு பெற்றிருக்கின்றனர். இதற்கிடையில் ஆதீன உற்சவங்களிலும், சமயப் பிரசாரக் கூட்டங்களிலும் தாம் இந்நூலிற் கண்டுள்ள அரும் பொருள்களை வெளிப்படுத்தியுள்ளனர் இவ்வுரையாசிரியர். பலகாலும் இப் பேராசிரியர்பால் கேட்டறிந்த நாவரசர் பாவமுதக் கூட்டெல்லாம் இக்காலைத் திரண்டு ஓர் இனிய நூல் வடிவாதலைக் காணுந்தோறும் உலகத் தமிழர் அனைவர் உள்ளமும் விரியும்; அப்பர் அடிகள் திருவடிமலர்களில் குவியும் என்பதில் ஐயம் இல்லை. நன்றி செலுத்த முற்படும் அன்பர் மனமெல்லாம், இத்திருக்கை வழக்கத்தை நல்ல உரையாசிரியர் வாயிலாக நாட்டினுக்கு வழங்கி அருளிய எங்கள் குருமுதல்வரும், தருமை ஆதீனத்து 25ஆவது அருளரசரும் ஆகிய சீலத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் திருவடி மலர்களுக்கே நன்றி செலுத்துக. அவர்கள் ஆட்சி ஓங்குக! திருவருள் பணிகள் உலகெங்கும் தேங்குக! இனிவரும் திருமுறைப்பணிகளும் இவ்வண்ணமே இனிது நிறைவெய்துக! என்று தமிழர் நெஞ்சுகள் தமிழ்ச் சொக்கன் தண்ணருளை நோக்கித் துதிபாடுகின்றன. வாழிய வையகம்! வாழிய சைவத் திருமுறை திருநெறிகள்!
|