பக்கம் எண் :

820திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

2068.
பட்ட ராகிலென் சாத்திரங் கேட்கிலென்
இட்டு மட்டியு மீதொழில் பூணிலென்
எட்டு மொன்று மிரண்டு மறியிலென்
இட்ட மீச னெனாதவர்க் கில்லையே.
3
2069.
வேத மோதிலென் வேள்விகள் செய்யிலென்
நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்
ஓதி யங்கமோ ராறு முணரிலென்
ஈச னையுள்கு வார்க்கன்றி யில்லையே.
4

     கு-ரை: கொங்கு - மணம் நிறைந்த. ஓங்கு என்பதன் குறுக்கல் ஓங்கு. மா - பொரிய. ஓதநீர் - அலைநீர்.ஈசன் ஓருவன் இருக்கின்றான் அவனருள்பெற இத்தீர்த்தமாடுகின்றோம் என்று எண்ணாதவர்க்கு அத்தீர்த்தமாடுவதால் விளையும் பயன் இல்லை.
     3. பொ-ரை: பட்டர் ஆயினும், சாத்திரங்கள் பல கேட்பினும், இட்டும் சேர்த்தும் கொடுக்கும் தொழில் பூணிலும், எட்டும் ஓன்றும் இரண்டும் அறிந்தாலும் என்ன பயன்? விருப்பம் இறைவனுக்கு என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம்.
     கு-ரை: பட்டர் -குருக்கள். இட்டும் - கொடைத்தொழில் செய்தும். அடுதல் - விருந்து சமைத்தல். ஈதொழில் - அடியார்களுக்குக் கொடுக்கும் தொழில். பூணில் என் - மேற்கொண்டால் என்ன எட்டும் அதனோடு ஓன்றும் இரண்டும் என்க. இட்டம் ஈசன் எனாதவர்க்கு - விருப்பம் ஈசனிடத்து உண்டு என்று சொல்லாதவர்க்கு.
     4.பொ-ரை: வேதம் ஓதினாலும், வேள்விகள் செய்தாலும், நீதிநூல்கள் பலவற்றை நித்தமும் பயிற்றினாலும், ஆறங்கங்களை ஓதி உணர்ந்தாலும் என்ன பயன்? ஈசனை உள்குபவர்க்கு அன்றிமற்றவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம்.
     கு-ரை: நித்தல் - நாடோறும். பயிற்றில் என் - பயின்றால் என்ன பயன் விளைக்கும். இல்லை - அருள் இல்லை என்க.