| மடுவார்தென் மதுரைநக ரால வாயில் | | | மறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு | | | குடவாயில் குணவாயி லான வெல்லாம் | | | புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே. | 7 |
நிறைந்த வயல் சூழ்ந்த நெய்தல்வாயில், நிலவும் முல்லைவாயில், ஞாழல்வாயில், வையை நீர் பொருந்திய அழகிய மதுரை நகரத்து மன்னும் ஆலவாயில், அலை எழுந்து மடங்கும் கடல் சூழ்ந்த புனவாயில், மாடங்கள் உயர்ந்து தோன்றும் குடவாயில், குணவாயில், ஆகிய இவற்றுள் எல்லாம் புகுந்த வணங்குவாரைப் பாவச் செயல்கள் ஒரு நாளும் பற்றமாட்டா. கு-ரை: இத்திருத்தாண்டகம், 'வாயில்' என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது. 'முல்லை வாயில்' என்னும் பெயருடைய தலங்கள் தொண்டைநாட்டில் ஒன்றும், சோழநாட்டில் ஒன்றும் உள்ளன; அவை முறையே, 'வட திருமுல்லைவாயில்' தென் றிருமுல்லை வாயில்' என வழங்கப்படும். 'ஆலவாய்' என்பதே மதுரைத் திருக்கோயிற் பெயராயினும் 'ஆலவாயில்' என்றலும் வழக்காதல் பற்றி, "மதுரை நகர் ஆலவாயில்" என்று அருளிச்செய்தார்; "நீள்கடிம்மதில் கூடலாலவாயிலாய் குலாயதென்ன கொள்கையே" (தி.3. ப.52.பா.1) என்று அருளிச் செய்த திருஞானசம்பந்த சுவாமிகள் திருப்பாடலிலும், 'ஆலவாயில்' என வந்தது என்றலே சிறப்புடைத்தாதல் அறிக. புனவாயில், பாண்டிநாட்டுத் தலம். குடவாயில் சோழநாட்டுத் தலம். அண்ணல்வாயில், நெடுவாயில் நெய்தல்வாயில், ஞாழல் வாயில், குணவாயில் இவை வைப்புத் தலங்கள். கடு வாயர் - கடுக்காயைத் தின்னும்வாயினை யுடையவர்; சமணர். கடுக்காயை அவ்வப்பொழுதுவாயிலிட்டுத் தின்னுதல் சுவைப் புலனை விரும்பச் செய்யும் நாவினது ஆற்றலைக் கெடுத்தற் பொருட்டு. "மடு" என்றது வையை ஆற்றினை. 'மடுவார்' என்றாயினும், 'மடுஆர்' என்றாயினும் கொள்க. "ஆன" என்புழி, 'வாயில்' என்பது எஞ்சி நின்றது.
|