பக்கம் எண் :

154
 

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருமுறைகளின்

சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 4

நாயன்மார் வரலாற்றுக் குறிப்புக்கள்

சிரோமணி, வித்துவான் வி. சபேசன்.,

தமிழ்ப் பேராசிரியர், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி.

அப்பூதி அடிகள் நாயனார்: 1

திருநாவுக்கரசு என்னும் திருநாமத்தையே மூலமந்திரமாகக் கொண்டு முத்தி எய்திய இவர் சோழமண்டலத்தில் திங்களூரில் அந்தணர் குலத்தில் அவதரித்துத் திருநாவுக்கரசு நாயனாரின் வரலாற்றைக் கேட்டறிந்து அவர்பால் பேரன்புகொண்டு, அவர் பெயரையே தம் மனைக் கண்ணுள்ள எல்லாப் பொருள்களுக்கும் தம்மக்களுக்கும் வைத்து வழங்கினார்.

திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசு சுவாமிகள், இச் செய்தியைக் கேள்வியுற்று, அப்பூதியடிகள் இருக்குமிடம் சென்று, "உம்பெயரால் தண்ணீர்ப் பந்தல் வையாமல் வேறொருவர் பெயரால் தண்ணீர்ப் பந்தல்வைத்த காரணம் யாது" என வினவினார். அப்பூதி யடிகள், அப்பரடிகளை அறியாமல், "சமண சமயத்தினின்றும் நீங்கிக் கல்லைத் தெப்பமாகக்கொண்டு கடலைக் கடந்த அவர் பெயரினும் வேறு பெயர் சிறப்புடையதோ? சைவராக இருந்தும் இவ்வாறு கேட்கும் நீர் யார்"என்றார்.

திருநாவுக்கரசு சுவாமிகளோ, "சமண் சமயத்தினின்று கரையேற இறைவனால் சூலை கொடுத்து ஆட் கொள்ளப்பெற்று உய்ந்த சிறுமையேன் யான்" என்றார். அதுகேட்டு அப்பூதியடிகள் ஆனந்தக்கடலில் மூழ்கி அடிபணிந்து திருவமுது செய்யவேண்டி இசைவு பெற்றார்.


1 தி.12 பெரியபுராணம்.