பக்கம் எண் :

155
 

பின்னர், திருவமுது பரிமாறத் தமது மூத்த குமாரனை இலை கொணர ஏவினார். மூத்தகுமாரர் வாழை இலையறுக்கும் போது அரவு தீண்ட, அடியவர் திருவமுதுக் கிடையூறு ஆமெனக் கருதி இலையைத் தாயிடம், கொணர்ந்து கொடுத்து மயங்கி வீழ்ந்தார். அப்பூதியடிகள், குமாரரது உடலை மறைத்து, சுவாமிகளைத் திருவமுதுக்கு அழைக்க, சுவாமிகள் திருநீறு அளிக்குங்கால், மூத்த திருநாவுக்கரசு எங்கே என வினவி நிகழ்ந்தது அறிந்து, திருவருள் நாடி "ஒன்றுகொலாம்"என்னும் திருப்பதிகம் அருளி, உயிர்ப்பித்து அப்பூதியடிகள் வேண்ட அமுதுண்டு சென்றார்.

பின்னர் அப்பூதியடிகள் திருநாவுக்கரசு சுவாமி களின் திருவடி தொழுது இறையடிநீழல் அடைந்தார். அப்பூதி அடிகளார் திருநாவுக்கரசர் திருவடியே சிந்தித்து வாழ்ந்தார் என்பதைச் சேக்கிழார் சுவாமிகள்,


அப்பூதி அடிகளார்தம் அடிமையைச் சிறப்பித் தான்ற

மெய்ப்பூதி அணிந்தார் தம்மை விரும்புசொன் மாலை வேய்ந்த

இப்பூதி பெற்ற நல்லோர் எல்லையில் அன்பால் என்றுஞ்

செப்பூதி யங்கைக் கொண்டார் திருநாவுக் கரசர் பாதம்

(தி.12 அப்பூதி. புரா. 43)

என்று குறிப்பிடுகிறார்கள்.

திருநாவுக்கரசர் அப்பூதியடிகளை, "அஞ்சிப் போய்க்கலி மெலிய அழலோம்பும் அப்பூதி, குஞ்சிப்பூவாய் நின்ற சேவடியாய்" (தி.4. ப.12.பா.10) என்று அகப்பொருள் துறையமையப்பாடும் திருப்பழனத் திருப்பதிகத்தில் குறிப்பிடுதல் ஓர்ந்து உணரத்தக்கது.

அமர்நீதி நாயனார்: 1

இவர் சோழவள நாட்டில் பழையாறை நகரில் வணிகர் குலத்தில் அவதரித்துத் திருமடம் ஒன்றமைத்து நாள் தோறும் அடியவர் களுக்கு அமுது செய்வித்து அவர்கள் கருத்தறிந்து கீளுடை கோவணம் உதவிவந்தார். இவரது பெருமையை உலகவர்க்கு அறிவிக்கத் திருவுளங்கொண்ட பரமன் ஒரு சிவனடியார் போல் வந்தார்.அமர்நீதி நாயனார் முகம் மலர்ந்து கடிது


1 தி.12 பெரியபுராணம்.