பக்கம் எண் :

159
 

கோச்செங்கட்சோழ நாயனார்:1

சோழநாட்டில் சந்திரதீர்த்தத்திற்கு அருகாமையிலுள்ள சோலையில் வெண்ணாவல்மரத்தின்கீழ் உள்ள சிவபெருமானை யானை ஒன்று வழிபட்டது. அதனால் அவ்வூர் திருவானைக்கா என வழங்கிற்று.

அவ்விலிங்கத்தின்மீது சருகுகள் விழாமல் சிலந்தி ஒன்றுதன் வாய்நூலால் பந்தல் அமைத்து வழிபட்டது. அப்பந்தலை யானை அநுசிதம் என்று அழித்தது. சிலந்தி மீண்டும் பந்தல் அமைத்தது. மறுநாள் வழிபடச்சென்ற யானை அதை அழித்தது. சினந்த சிலந்தி யானையின்துதிக்கையில் புகுந்தது. யானை கையைத் தரையில் புடைக்கச் சிலந்தியும் யானையும் இறந்தன.

இறையருளால் சிலந்தி சோழர் குலத்தில் கோச்செங்கட் சோழனாய்த் தோன்றியது. செங்கணான் அரசாளுகையில் முன்னுணர்வு பெற்றுத் திருவானைக்காவிலும் மற்றும் பல இடங்களிலும் திருக்கோயில்கள் எடுப்பித்துச் செங்கோலாட்சி புரிந்து தில்லைக் கூத்தப்பெருமானைத் தொழுது திருவடி சேர்ந்தார்.

இவரது வரலாற்றைச் சுவாமிகள் பல இடங்களிலும் எடுத்துச் சிறப்பித்திருத்தல் காணலாம். திருக்குறுக்கைத் திருப்பதிகத்தில் "சிலந்தியும், ஆனைக்காவில் திருநிழற்பந்தர் செய்து, உலந்தவண் இறந்தபோதே கோச்செங்கணானுமாகக், கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர்தங்கள், குலந்தனிற் பிறப்பித்திட்டார் குறுக்கைவீ ரட்டனாரே" என்பது (தி.4:- ப.49. பா.4, ப.62. பா.9, ப.65. பா.3, தி.6:- ப.20. பா.5, ப.23.பா.3, ப.65. பா.6, ப.75. பா.8, ப.83. பா.6) முதலிய பல இடங்களிலும் கூறியுள்ளமை வரலாற்றிற்கு உரிய மூலங்களாக உள்ளன.

சண்டேசுவர நாயனார்:2

சோழநாட்டுத் திருச்சேய்ஞ்ஞலூரில் அந்தணர் குலத்தில் எச்சதத்தன் என்பவருக்கு அவதரித்து, விசாரசருமர் என்ற பெயருடன் வேதம் முதலியன உணர்ந்து சிவபக்தியுடையவராய் இருந்தார். ஒருநாள் இடையன் ஒருவன் பசுக்களை மேய்க்க ஒட்டிச்செல்லும் பொழுது ஒரு பசுவைக் கோலால் அடிக்கக் கண்டு பொறாது இடையனுக்குப் பசுவின் தன்மைகளை எடுத்துக்


1,2. தி.12 பெரியபுராணம்.