பக்கம் எண் :

163
 

"மாயிருஞாலமெல்லாம்" என்று தொடங்கும் ஆவடு தண்டுறைத் திருப்பதிகத்தில் 'கழுமலவூரர்க் கம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே' என்று குறிப்பிடுதல் காண்க.

நமிநந்தியடிகள் நாயனார்:1

இவர் சோழநாட்டு ஏமப்பேரூரில் தோன்றி சிவத்தொண்டு புரிந்தவர். திருவாரூரில் புற்றிடங்கொண்டாரை வணங்கி மாலைக் காலத்தில் அருகில் இருந்த வீட்டில் சென்று விளக்கெரிக்க எண்ணெய் வேண்டி நின்றார்.

அவ்வீடு சமணர் வீடாயிருந்தமையின் அவர்கள் நாயனாரிடம் 'உங்கள் பெருமான்கையில் தீயிருப்பதால் விளக் கெரிக்கத் தேவையில்லையே என்றும், வேண்டுமானால் தண்ணீரை ஊற்றி விளக்கு எரியவிடும்' என்றும் கூறினார்.

அது கேட்டு வருந்திய அடியவர், பெருமான் சந்நிதியில் முறையிட, பெருமான் அசரீரியாகத் திருக்குளத்து நீரை ஊற்றி விளக்கெரிக்கச் சொல்ல, அதன்படி விடியுமளவும் திருவிளக்குத் திருப்பணி புரிந்து வந்தார்.

ஒரு நாள் வீதிவிடங்கப் பெருமான் பவனி வருகையில் உடன் சென்று, மீண்டு வந்து பலருடன் சென்று வந்ததால் உட்புக மனமில்லாமல் தமது வீட்டின் புறத்தே துயின்றார். இறைவன் கனவில் "திருவாரூர்ப் பிறந்தாரனைவரும் நமது சிவகணங்கள்" என்று கூறக்கேட்டு இல்லின் உள்ளே சென்று சிவார்ச்சனை செய்து பொழுதுவிடிந்தபின் திருவாரூர்ப்பிறந்தாரனைவரையும் சிவ கணங்களாகக் கண்டு தரிசித்தார்.

நம்பிநந்தியடிகள் என்ற பெயரே நமிநந்தியடிகள் எனமாறி வழங்கும் என்பர்.

இவ்வரலாற்றை நாயனார், தொண்டன் நம்பி நந்தி நீரால் திருவிளக்கிட்டமை நீணாடறியுமன்றே " (தி.4. ப.102. பா.2) என்பது முதலிய பல இடங்களில் (தி.4 ப.102. பா.4, 9. தி.6 ப.33 பா.4) குறிப்பிடுதல் காண்க.


1 தி.12 பெரியபுராணம்.