பக்கம் எண் :

220
 

திருவாவடுதுறை ஆழ்வார், திருவாவடுதுறை உடையார், திருவாவடுதுறைப்பெருமான் அடிகள் என்னும் திருப்பெயர்களால் இக்கோயில் கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளனர். மிகப் பிற்காலத்துக் கல்வெட்டு ஒன்று இறைவர் திருப்பெயரைக் கோமுத்தீஸ்வரர் என்று குறிப்பிடுகிறது.

இறைவியாரின் திருப்பெயர்:

மிகப் பிற்காலத்துக் கல்வெட்டு இறைவியாரின் திருப்பெயரை அதுல குச நாயகி எனக் கூறுகின்றது.

இத்திருக்கோயிலில் மிகப் பழங்காலத்தில் எழுந்தருளுவிக்கப் பெற்ற திருமேனிகளும் பிரதிமைகளும்:

சிற்றம்பலத்திருமேனி முதல் ஆடி அருளும் உடையாரும், ஆட்டத்திற்கு வாசிக்கும் பூதமமைத்த பீடமும் பிரபையும் (திருவாசி) உட்பட முழ உயரத்து ஒருவர். இவர் நம்பிராட்டியார் பீடமும் பிரபையுமுள்பட இருந்த ஒருமுழமும் ஆறுவிரல் உயரத்து ஒருவர்: சந்திரசேகர தேவர் பீடமும் பிரபையும் உட்பட இருமுழ உயரத்து ஒருவர். இவர் நம்பிராட்டியார் பத்மத்தோடும் ஒருமுழ உயரத்து ஒருவர்; திரிபுவன சுந்தரர் பீடமும் பிரபையும் உட்பட மும்முழ உயரத்து ஒருவர். கணபதியார் பீடமும் பிரபையும் உட்பட ஒருமுழ உயரத்து ஒருவர்; சந்திரசேகர தேவர் பீடமும் பிரபையும் ஒருசாணும் ஒருவிரல் உயரத்து ஒருவர்: க்ஷேத்திர பால தேவர் பீடமும் பிரபையும் உட்பட ஒரு முழ உயரத்து ஒருவர். மேற்படி தேவர் பீடம் உட்பட ஒருசாணே நால்விரல் உயரத்து ஒருவர். இடபவாகன தேவரும் பிராட்டியாரும், இடபமும் பீடமும் பிரபையுமுட்பட மும்முழ உயரத்து ஒருவர். பிச்சதேவர் மானும் பூதமும் பீடமும் பிரபையும் உட்பட இருமுழ மூவிரல் உயரத்து ஒருவர். அர்த்த நாரி தேவர் பத்மத்தொடு ஒரு முழம் ஓட்டை உயரத்து ஒருவர். தட்சிணாமூர்த்தி ஒரு முழ உயரத்து ஒருவர். பள்ளிக்கட்டில் நம்பிராட்டியார் பீடமுட்பட இருமுழ உயரத்து ஒருவர். அஸ்திரதேவர் நடுவுமாகத் தண்டொடும் ஒருவர். இடபதேவர் பீடமுட்படத் திருக்காம்பு அளவும் ஈரொட்டை உயரத்து ஒருவர். சண்டேசுவர தேவர் பீடமுட்பட இருந்த ஒருமுழ உயரத்து ஒருவர். திருநாவுக்கரைய தேவர் ஒருமுழமும் நான்கு விரல் உயரத்து ஒருவர். சிவஞானசம்பந்த அடிகள் பீடமும் பிரபையும் உட்பட ஒருமுழம் ஆறுவிரல் உயரத்து ஒருவர். நம்பி ஆரூரனார் பத்மத்தோடு ஒரு முழமும் ஆறுவிரல் உயரத்து ஒருவர். திருக்காளத்திப்பிச்சர் தம்மையாக வார்த்த ஒருமுழ உயரத்து ஒருவர்.