பக்கம் எண் :

47
 

(தி.11 நம்பியாண்டார் நம்பிகள்) இத் திருமுறையின் பொருளை ஒருவாறு உணர்ந்து ஓதுமாறு செய்விக்க மகாசந்நிதானத்தில் எழுந்த, உலகுக்கு உதவியாம் அவ்வொருபேரருளாணையை ஏற்கும் கடப்பாட்டினாலும், அவ்வருளாணை இத்திருமுறை உணர்விலே பொழுது கழியவும், அவ்வுணர்வில் தோன்றும் ஒன்றிரண்டு கருத்துக்களைக் கற்றல் கேட்டலுடைய பெரியார்முன் வைத்து, கொண்டுங் கொடுத்தும் பயன் பெறுதற்கும் வாய்ப்புத் தருவதாகும் என்னும் எண்ணத்தினாலும் இதற்குச் சில குறிப்புக்களை எழுதத் தொடங்கினேன்.

நாவுக்கரசரது திருமுறைகளின் இயற்கைப்படி திருத்தாண்டகத் திருமுறையுள்ளும் சொற்களே சில பிறவிடத்துப் பயின்றறி யாதன; பொருள்களும் அத்தகையன. கல்லலகு, கோடாலம், நகழ்தல், நமைப்புண்ணல் முதலியன அத்தகைய சொற்களாகும். அவற்றுள், 'கல்லலகு' என்பது, திருக்கைலாய ஞானவுலாவிலும் வந்துள்ளது.

"பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோ டஞ்சாய்ப்

பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்

விரியாத குணமொருகால் நான்கே யென்பர்

விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்

தெரிவாய குணமஞ்சஞ் சமிதை யஞ்சும்

பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்"

(தி.6. ப.16. பா.7)

"புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்

பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டும்

கலையெட்டும் காப்பெட்டும் காட்சி யெட்டும்

கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்

நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்

நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டும்

திகையெட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே"

(தி.6. ப.34. பா.9)

என்றாற்போலும் பகுதிகளின் பொருளை யறிய யாதும் துணை செய்யவில்லை. இன்னோரன்ன இடங்கள் பொருள் காணுதற்கு அரியனவேயாம். அவ்விடங்களுக்கெல்லாம் இயன்ற வகையில் பொருள் காணப்பட்டது.