பக்கம் எண் :

48
 

இவைபற்றியாக, வேறு எவைபற்றியாக, எவ்வாற்றானும், 'இத் திருமுறையின் குறிப்பை யான் காண்பேன்' என்னும் முனைப்புச் சிறிதேனும் உடையேனாய் அடியேன் இதன்கண் புகுந்திலேன்; 'எல்லாவற்றையும், எல்லார்க்கும், வேண்டும் பொழுது ஏற்ற பெற்றியால் உள்நின்று உணர்த்தி வரும் சிவமுதற் பொருளின் திருவருள், சிறியேன் உளத்திலும் நின்று சில உணர்த்தும்' என்னும் உறுதி பற்றியே புகுந்தேன், அங்ஙனம் உணர்த்த உணர்ந்து குறித்த நல்லன உளவாயின் அவைகளை ஏற்று, உணர்வின்மையால் நேர்ந்த குறைகளை அறிஞர் உலகம் அன்பினாற் பொறுத்துத் திருத்திடும் என நம்புகின்றேன்.

இவ் அரிய பணியில் ஈடுபடும் வாய்ப்பு அடியேனுக்கு உண்டாகத் திருவுளம் பற்றியருளிய ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்களது பொன்னார் திருவடிகளுக்கு எனது மன மொழி மெய்களாலாகிய, என்றும் மறவா நன்றியறிவோடு கூடிய பெரு வணக்கத்தினைச் செலுத்திக் கொள்ளுகின்றேன்.

அப்பர் திருமுறைகளில் முடிவான திருமுறையாகிய இவ் ஆறாந் திருமுறை, குறிப்புரையோடு மற்றும் பல சிறப்புக்களைப் பெற்றுத் திகழும் வண்ணம் அப்பர் தேவாரத்தில் இலக்கியப் பண்புகளை எழுதி உதவிய, தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி முதல்வர் செஞ்சொற் கொண்டல். வித்துவான். திரு. சொ. சிங்காரவேலன் எம்.ஏ., அவர்கட்கும், திருநாவுக்கரசு சுவாமிகள் வரலாறு எழுதி உதவிய, அக் கல்லூரிப் பேராசிரியர் திருநெறிச்செம்மல், வித்துவான். திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கட்கும், அப்பர் திருமுறையில் குறிக்கப்பட்ட புராண வரலாற்றுக் குறிப்புக்களைக் கண்டுதொகுத்து விளக்கம் எழுதி உதவிய. அக் கல்லூரிப் பேராசிரியர். சிரோமணி வித்துவான். திரு. வி. சபேசன் அவர்கட்கும், திருத்தலங்களின் கல்வெட்டு வரலாறுகளை எழுதியுதவிய திருவையாறு கல்வெட்டாராய்ச்சிக் கலைஞர். வித்துவான். திரு. வை. சுந்தரேச வாண்டையார் அவர்கட்கும் தனித்தனியே எனதுஉளங் கலந்த நன்றி என்றும் உரியது.

இவ் அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி உதவிய தனோடு, இத் திருமுறையை அச்சிடுங்காலத்துப் பிழை திருத்தியும், பாட்டு முதற்குறிப்பு அகராதி, சொல்லகராதிகளைத் தொகுத்துக் கொடுத்தும் பல்லாற்றான் உதவியமுதல் முப்பெரும் புலவர்கட்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவிக்கும் கடப்பாடுடையேன்.