விண்ணுக்குமாகச் சுழல்கின்றது; சுழன்று நோக்கிக் கற்பனை வடிவங்களைப் படைக்கின்றது. அவ்விழுமியோனுடைய எழுது கோலால் அறியப்படாத பொருள்கள் வடிவம் பெறுவதுடன் உயிர்த் தன்மையும் எய்துகின்றன". என்று ஆங்கில நாடகப் பெருங்கவிஞராகிய சேக்ஸ்பியர் கூறும்பகுதி இங்கு ஒப்பிட்டு மகிழத்தக்கது. அருட்பாடல்களின் ஆற்றல்: இத்தகு கவிஞர்களின் உறவு உள்ளத்தைத் திருத்தும் உயர்வுஉடையது; உலகியற்றுன்பங்களினின்று உயர்ந்து உயிர்ப் பறவையை மேலே மேலே பறக்குமாறு செய்து எங்கும் - என்றும் இன்பமாய பெரும் பேற்றிற்கு உய்ப்பது. அதிலும் திருநாவுக்கரசு சுவாமிகளைப் போன்ற அருட்புலவர்கள் பாடல்கள் என்றால் கூறவா வேண்டும்! அருளே வடிவாகிய இறைவனை அகமுருகப்பாடி மகிழும் அருள் ஆசிரியர்கள் அவர்கள். அவர்களது அருங்கவிதைகள் பக்தியை விளைக்கும் பண்புடைய பாடல்கள்; இசை தழுவிய எண்ணக் குவியல்கள்; பண் கலந்த பாடல் தொகுப்புக்கள். இறைவனுடைய கருவியாக நின்று தாம் இயங்குகின்றோம் என்ற எண்ண அழுத்தம் உடைய அவ்வருட் செல்வர்களின் உணர்ச்சிப் பிழம்புகளாகிய கவிதைகள் நம் வாழ்வுக்கு நெறிகாட்டும் வான்புகழ்க் கலங்கரை விளக்குக்கள் என்றே கூறலாம். அவர்கள் தம் வாழ்வில் என்ன கண்டார்கள், தம் வாழ்வில் பட்டறிந்த உண்மைகளால் என்ன உணர்வு பெற்றார்கள், அவ்வுணர்வி னின்றும்அவர்கள் தெளிந்ததென்ன, நம்மனோர்க்கு அத்தெளிவினால் அவர்கள் உரைக்கும் செய்திகள் யாவை என்பதற்கு அவர்களது இலக்கியமே சான்று பகரும். இவையனைத்தையும் காட்டுவதே இலக்கியப் பண்பு என்பர். 1
1 Literature is a vital record of what men have seen in life, what they have experienced of it, what they havethought and felt about those aspects of it which have the most immediate and enduring interest for all of us - W. H. Hudson.
|