(1) பொருளமைப்பு: திருஅங்கமாலை, தசபுராணம், குறைந்த திருநேரிசை, காலபாசத் திருக்குறுந்தொகை, ஆதிபுராணத் திருக்குறுந் தொகை, இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை - முதலியன. (2) பாடல்தோறும் பயின்ற சொற்பொருளமைப்பு: கொப்பளித்த திருநேரிசை, நினைந்த திருநேரிசை, ஆருயிர்த் திருவிருத்தம், சரக்கறைத் திருவிருத்தம், திருவடித்திருத்தாண்டகம், புக்க திருத்தாண்டகம் முதலியன. (3) முதற்குறிப்பு: "சிவனெனும் ஓசை" என்ற பதிகம். (4) ஈற்றுத்தொடர்: பாவநாசத் திருப்பதிகம். (5) பொருட்டொகை: மனத்தொகை, சித்தத்தொகை, உள்ளத்தொகை, க்ஷேத்திரக்கோவை முதலியன. (6) பாடல்களிற் பயின்ற ஈற்றுச்சொல்: மறக்கிற்பனே, தொழற்பாலதே எனுங் குறுந்தொகைகள். (7) சிறப்பு: நமச்சிவாயத் திருப்பதிகம். (8) பொதுவகை: தனித்திருநேரிசை, தனித்திருக்குறுந்தொகை,தனித்திருத்தாண்டகம், பலவகைத் திருத்தாண்டகம். அப்பர் மேற்கொண்ட யாப்புவகைகள்: அப்பரடிகள் தமிழ்க்கவிதையாப்பில் மேற்கொண்டுள்ள வகைகள் தமிழ் இலக்கணத்துடன் மாறுகொளாதவை; சந்த விருத்தங்களும், விருத்தவகைகளும், கலிவிருத்தங்களும், கட்டளைக் கலித்துறைகளும், ஆகியவற்றுடன் தாண்டகம் என்ற வகையும் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார். தாண்டகம் என்ற பாட்டியல் வகையை அடிகள் கையாண்டு வெற்றி பெற்றுள்ளமையாலேயே "தாண்டகச்சதுரர்" என்ற சிறப்புப் பெயருக்குரியவரானார். 1 
 1 தி.12 பெரியபுராணம் - குங்குலியக் கலையர். 32. 
 |