சூதாடுவோர் அவ்வூரில் இல்லாமையால் ஆவ்வூரை யகன்று சிவஸ் தலங்கள்தோறுஞ் சென்று சுவாமி தரிசனஞ்செய்து அங்கங்கும் சூதாடி அதனால்வரும் பொருளைக் கொண்டு தம்முடைய நியதியை முடித்துக் கொண்டு சில நாளில் திருக்குடந்தையை அடைந்தார். அங்குச் சூதாடி வென்று கிடைத்த பொருளால் மாகேசுவரபூசை செய்தார். சூதாடும் பொழுது முதலாட்டத்திலே தாம் தோற்றுப் பின்னர் ஆடும் ஆட்டங்களில் வென்று அதனால் பொருளைத் தேடினார். பொருள் தர மறுத்தவர்களைக் கத்தியை உருவிக் குத்தி 'சூதர்' என்ற பெயரையும், 'மூர்க்கர்' என்ற பெயரையும் பெற்றார். சூதினால் வரும் பொருளைத் திருவமுதாக்குவோர்கொள்ள, தாம் தீண்டாதவராய், அடியார்கள் அமுதுசெய்தபின் கடைப்பந்தியில் தாம் உண்டு வாழ்ந்தார். இவ்வடியவர் பற்றிய குறிப்பை, கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்றிவர்கள் குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் கொள்கைகண்டு நின்குரை கழலடைந்தேன். (தி. 7 ப. 55 பா. 4) என்ற சுந்தரர் தேவாரத்தில் காணலாம். முடிவுரை: இங்குக் குறிக்கப்பெற்ற நாயன்மார்களது வரலாறுகளும் திருத் தொண்டத் தொகையில் அன்றிப் பிற இடங்களிலும் எடுத்துப் பாராட்டப்பெற்ற சிறப்பும் இத்திருமுறைத் திருப்பதிகங்களால் விளங்கும். இவ் வரலாற்றுச் சிறப்புக்களையும் தமிழுலகமும் சைவ உலகமும் உணர்ந்து பயன் எய்துவனவாக.
|