பக்கம் எண் :

155
 

என்பதையும் ஓராது ஓரான்கன்றுக்காகத் தன் மகனது உயிரைப் போக்கிய மனுநீதிச் சோழன் ஆண்டதும் இப்பதியேதான். "திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாய்மலர்ந் தருளியிருப்பதால் இப்பதியின் பெருமையை அளவிடுவார் யார்? இதை விரிப்பின் அகலும். தொகுப்பின் எஞ்சும். பெரியபுராணத்திலுள்ள திருவாரூர்ச் சிறப்பு என்னும் பகுதி படித்து இன்புறுதற்குரியதாகும்.

திருவாதிரைத் திருவிழா : பழங்காலத்தில் இவ்விழா பெருஞ் சிறப்புடன் கொண்டாடப்பட்டுவந்தது. அவ்விழாவை அப்பர் சுவாமிகள் கண்டு களித்து, அதன் சிறப்பை "முத்து விதானம்" என்று தொடங்கும் ஒரு தனித் திருப்பதிகத்தினால் ஞானசம்பந்தப் பெருந்தகையார்க்குக் கூறியருளியிருக்கிறார்கள்.

பங்குனி உத்திரத் திருவிழா : இது மாசிமாதம் அத்த நட்சத்திரத்தில் கொடியேறி, பங்குனி உத்திர நட்சத்திரத்தில் தீர்த்தம் நடைபெறும், திருவிழாவாகும். இவ்விழா நினைவிற்கு வரவே ஒற்றியூரிலிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் சூளுறவையும் மறந்து, திருவாரூர்க்குப் புறப்பட்டார் என்று பெரியபுராணம் செப்புகின்றது. அதனால் இவ்விருவிழாக்களும் பழங்காலமுதல் நடந்துவரும் சிறப்புடையனவாதலை நன்கறியலாம்.

பூங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் திருப்பெயர்கள் வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், திருமூலட்டான நாதர். இறைவியாரின் திருப்பெயர் அல்லியம்பூங்கோதை அம்மை. யோக நிலையில் தனிக்கோயிலில் கமலாம்பிகையாக எழுந்தருளியுள்ளார்.

இக்கோயிலில் விளங்கும் கட்டளைகளுள், இராஜன் கட்டளை தருமை ஆதீன அருளாட்சியில் உள்ளது.

இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராசர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர். பிறகு அவரால் இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப்பெற்றவர். மார்கழித் திருவாதிரையும் பங்குனி உத்திரமும் இவரை வழிபடற்குரிய சிறந்த நாள்கள் என்று அறிஞர்கள் உரைத்துள்ளனர். இவர் எழுந்தருளியிருக்கும் இடம் தேவசபை என்றும், இவருக்குத் தென்றல்காற்றுவரும் கல்சன்னல் திருச்சாலகம்