சோழ விச்சாதர விழுப்பரையன் இசைபாடுவோர்க்கும், கோயிலுக்கு எண்ணெய்க்கும் ஆகப் பொன் கொடுத்திருந்தான். குலோத்துங்கன் கல்வெட்டு ஊர்ச்சபையார் தேவாசிரயன் மண்டபத்தில் கூடிக் கோயில் காரியங்களைக் கவனித்துவந்ததைக் குறிப்பிட்டுள்ளது. மூன்றாங் குலோத்துங்கனுடைய கல்வெட்டு, புதுநீர்வரு வழியிலுள்ள விநாயகர் ஆலயத்தைத் திருப்பணி செய்வித்து, நாள் வழிபாட்டிற்கு நிலம் அளித்திருந்த செய்தியைக் குறிப்பிட்டுள்ளது. மூன்றாம் இராஜேந்திரன் திருக்கோயிலுக்கு முன்புள்ள திருமாளிகை விநாயகப் பிள்ளையார் கோயிலை எடுப்பித்தான். இங்ஙனம் சோழ மன்னர்களே யன்றிப் பிற்காலப் பாண்டியர்கள் முதலானோர்களும் நிலம் முதலியவற்றை உதவியுள்ளனர். இசைஞானியார் :- சிவநெறிக்குரவர் நால்வருள் ஒருவராகிய சுந்தரமூர்த்திநாயனாரின் அரும்பெறல் தாயார் இசைஞானியார் என்பதையும், அவ்வம்மையார் கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த ஞான சிவாசாரியாருடைய மகளார் என்பதையும் அவர் திருவாரூர்ப் பதியினர் என்பதையும் ஒரு கல்வெட்டு உணர்த்துகிறது. இச்செய்தி சேக்கிழார் பெரியபுராணத்தில் இசைஞானியார் புராணத்தில் காணப் பெறாததாகும். மனுநீதிச்சோழன் : விக்கிரம சோழதேவரின் ஐந்தாம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டு பெரியபுராணத்தில் கூறப் பெற்றுள்ள மனுநீதிச்சோழனின் செயலை உறுதிப்படுத்துவதோடு, அம்மனுநீதிச் சோழனின் மந்திரியாயிருந்தவன் உபயகுலாமலன் என்பதையும், அவன் சோழமண்டலத்தில் இங்கணாட்டுப் பாலையூரினன் என்பதையும் அம்மந்திரியின் வழியில்வந்த பாலையூர் உடையான் சந்திரசேகரனாதி வீதி விடங்கனான குலோத்துங்கசோழ மாபலிவாணராயன் என்பவன் விக்கிரமசோழன் காலத்தவன் என்பதையும், அவன் வேண்டுகோளின்படி, அவன் வம்சாதியாக வருகிற மாளிகை மனையில் நாள்தோறும் அடியார்க்கு அமுது இடப்பெற வேண்டுமென்று மந்திரியாகிய குலோத்துங்க சோழ மாவலிவாணராயன் அரசனிடம் விண்ணப்பித்துக்கொள்ள, அரசனும் (விக்கிரம சோழனும்) அதற்கு இசைந்தருளியதை உணர்த்துவதாகும். நம் ஏவலால் பூலோக ராஜ்யம் செய்கிற சூரியபுத்திரன் மநு, தன்
|