பக்கம் எண் :

170
 

கங்கை கொண்ட சோழன் திருக்கொற்றவாசலில் புறவாயில் சேனாபதியாக இருந்த இளங்காரிகுடையான் சங்கரன் அம்பலன்கோயில் கொண்டானான அனந்தபாலன் என்பவனால் நிறுவப்பெற்றதாகும். சங்கர தேவன் அறச்சாலை திருவாவடுதுறை உடையார்கோயில் சிவலோக நாயகன் திருவாசலின் முன்பக்கத்தில் இருந்தது. மேற்குறித்த மடங்களிலும் அறச்சாலைகளிலும் திருவாவடுதுறை உடையார் திருநாளில் அடியார்களுக்கும், பிராமணர்களுக்கும், தபசிகளுக்கும், அநாதைகளுக்கும் அமுது அளிக்கப்பெற்றுவந்தன. முந்நூற்று அறுபத்து நால்வன் அறச்சாலையில் மருத்துவ நூல் படிப்பவர்களுக்கும், இலக்கணம் படிப்பவர்களுக்கும் அமுது அளிக்கப்பெற்றுவந்த செய்தி குறிப்பிடத்தக்கதாகும். இவைகளன்றி முதலாம் இராஜேந்திரசோழன் கல்வெட்டில் சர்வதேவன் திருமடம் என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.

நடனசாலை:

இத் திருக்கோயிலில் முதற்குலோத்துங்கசோழன் காலத்தில் நானாவித நடனசாலை என்னும் பெயருள்ள நடனசாலை இருந்தது.

அளிக்கப்பெற்ற நில நிவந்தங்களுள்சில:

இக்கோயிலைக் கட்டிய கற்றளிப்பிச்சன் திருப்பதியம் பாடுவார் ஒருவர்க்கும், திருமஞ்சன மட்டுவார்க்கும், உவச்சர்களுக்கும், மடத்துக்கும் சிற்றானைச்சூரில் நிலம் வாங்கி அளித்துள்ளான். கோப்பரகேசரிவர்மர் (முதற் பராந்தக சோழன்) காலத்தில் இந்நிவந்தம் செய்யப்பெற்றதாகும்.

இதை உணர்த்தும் கல்வெட்டுப் பின்வருமாறு:

ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரிவன்மற்கியாண்டு 3 (மூன்றா) வது திருவாவடுதுறைக் கற்றளிப்பிச்சநேன். சிற்றானைச்சூரனான் விலைக்கறக்கொண்டு மேற்புலத்து வடக்கடையத் திருப்பதியம் பாடுவாரொருவற்கு அறுமாவும். இதன் தெற்கடை காற்செய திருமஞ்சனமட்டுவார்க்குக் காலும் இதன் தெற்கடையத் திரு உவச்சர்களுக்குக் காணி மடத்துக்கு காலுமாக நிவந்தஞ்செய்து குடுத்தேன். கற்றளிப்பிச்சநேந் இது பன்மாஹேஸ்வர ரஷை, இக் கல்வெட்டு அர்த்தமண்டபத்தின் கிழக்குப்புறச் சுவரில் வாசலுக்கும் துவாரபாலகர்க்கும் வடபால் இருக்கின்றது.