இக்கோயிலில் தேவரடியாரைப் பாடச் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆளுடைய பிள்ளையார் ஆளுடைய நம்பி இவர்களுக்கு உய்யக்கொண்டார் வளநாட்டு இருமாறன் பூண்டிப்பெருமாள் சதுர்வேதி மங்கலத்தில் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டானின் 21 ஆம் ஆண்டில் நிலம் விடப்பெற்றிருந்தது. ஒரு கல்வெட்டு நான்காம் பிராகாரத்தில் எழுந்தருளியிருக்கும் பிடாரி போகிருந்த பரமேசுவரியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இத் திருக்கோயிலுக்கு உரியதாக திருக்கலசக்கோரோணியின் தென்கரையில் ஒரு நந்தவனம் இருந்தது. அதற்குச் செம்பியன் மாதேவியான பெருஞ்சண்பக நந்தவனம் என்னும் பெயர் இடப்பெற்றிருந்தது. முதலாம் இராஜராஜ மன்னரது தேவியாராகிய பஞ்சவன் மாதேவியார் இறைவனை வழிபட வந்தபொழுது இந்த நந்தவனத்திற்கு எழுந்தருளிப் பார்வையிட்டதை ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. மல்லிகைப் பூக்களைச் சாத்துவதற்காக மல்லிகை நந்தவனம் என்னும் தோட்டமும் இருந்தது. இக்கோயில் திருமடைவிளாகத்தில் பெருந் திருவாட்டி என்னும் பெயர் பூண்ட மடம் ஒன்று இருந்தது. இது இளங் காரிகுடை யான் சங்கரதேவன் சிவலோக நாயகனான கங்கை கொண்டசோழ அனந்த பாலனால் செய்வித்ததாகும். இங்கா நாட்டுப் பல்லவரையன் இத்திருக்கோயிலில் ஆடல் விடங்கதேவரை எழுந்தருளுவித்திருந்தான். இத்திருக்கோயிலின் வாசல் ஒன்றுக்கு ஏகநாயகன் திருவாசல் என்னும் பெயரை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது. ஒரு பிள்ளையாருக்குப் புராண கணபதி என்னும் பெயர் உண்மையை ஒரு கல்வெட்டு புலப்படுத்துகின்றது. முதற் பராந்தகன் காலத்துக் கல்வெட்டுக்கள் இவ்வூரைத் தென்கரை, திரைமூர் நாட்டுத் திருவிடைமருதில் எனவும், முதற் குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டுக்கள் உலகுய்யக் கொண்ட சோழவளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடைமருதூர் எனவும் குறிப்பிடுகின்றன. முதற் பராந்தகசோழன் காலத்தில் அளிக்கப்பட்டவை: - திருவிடைமருதில் ஸ்ரீ மூலஸ்தானத்துப் பெருமானடிகளுக்கு மார்கழித் திருவாதிரை தோறும் நெய்யாடி அருளுதற்குத் தொண்டை நாட்டு, செங்காட்டுக் கோட்டத்து மாகணூர் நாட்டு இடும்பேட்டைப்
|