இக்கோயில் கல் வெட்டுக்களில் இறைவர் திருக்காளத்தி உடைய நாயனார், திருக்காளத்திச் சிவனார், ஆளுடையார் தென்கயிலாய முடையார் என்னும் பெயர்களாலும், விடங்கர் சோதிவிடங்கர் என்னும் பெயராலும் கூறப்பெற்றுள்ளனர். திருவிழா : திருக்காளத்தி உடையார்க்கு வைகாசியில் திருவிழா நடைபெற்று வந்தது. அவ்விழா முட்டாமல் நடைபெறுவதற்கு நரசிங்க காளத்தி தேவனான யாதவராசன் சயங்கொண்ட சோழமண்டலத்துத் திருவேங்கடக் கோட்டத்து. கருப்பற்று நாட்டு வெண்ணெய் நல்லூரைத் தட்டார் பாட்டம், தறிஇறை, வெட்டி, முட்டையாள், பட்டிக்காசு காணிக்கை, கன்மிப்பேறு, மற்றும் எப்பேர்ப்பட்ட வரிகளும் அகப்பட தேவதானமாக விட்டிருந்தான். இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோதிவிடங்கர், எட்டாந் திருநாளில் திருவீதிக்கு எழுந்தருளி, திருச்சாந்து கற்பூர வெள்ளைச் சாத்தித் திருவுலாப்புறம் செய்து, தோசை, திருக் கண்ணமுது இவைகளை அமுது செய்தருளுவது வழக்கம். அதன் பொருட்டுப் பொலியூட்டாக நூறு பணம் அளிக்கப் பெற்றிருந்தது. இக்கோயிலில் மாசித் திருவிழாவும் மிகச் சிறப்பாய் நடைபெற்று வந்தது. அவ்விழாவின் ஏழாம் நாளில் இமையோர்கள் நாயகர் திருவீதிக்கு எழுந்தருளி, திருக்கல்யாணம் பண்ணி, திருவூடல் தீர்த்து திருக்கோயில் வாசலில் பலிபீடத்தண்டையில், திருவாலத்தில் தட்டம் எடுத்த பிறகு அத்தேவர் தோசை அமுது செய்தருளுவது உண்டு. அதன் பொருட்டும் நிவந்தம் செய்யப்பெற்றிருந்தது. திருமடம் : திருக்காளத்தி உடையார் கோயிலில் மலைமேல் ஒரு மடம் இருந்தது. அது சசிகுல சளுக்கி வீரநரசிங்க தேவன் திருக்காளத்தித் தேவனான யாதவராயனால் கட்டப்பெற்றது. அம்மடத்தில் மாகேஸ்வரருக்குச் சோறிட பெரும்பூண்டி நாட்டுப் பொன்னையன் பட்டு என்னும் ஊரின் நாற்பால் எல்லைக்கு உட்பட்ட நன்செய் புன்செய் நிலத்தை மேற்கூறப்பெற்ற வீரநரசிங்க தேவன் இராசராச தேவரின் 15ஆம் ஆண்டில் கொடுத்திருந்தான். இதுவன்றித் தியாகமேகன்மடம் ஒன்று இருந்தது. இதில் நாள் ஒன்றுக்கு முப்பது தேசாந்தரிகளுக்குச் சோறும், ஐந்து பிராமணர்
|