என்றும் பெயர்கள் வைக்கப்பெற்றிருந்தன. மூன்றாம் பிராகாரத்தில் உள்ள மண்டபம் சின்னையா மண்டபம் எனப் பெயர் பெற்றுள்ளது. திருநுந்தாவிளக்குகளுக்கும், திருமந்திர போனக புறத்திற்கும் நிபந்தங்கள் மிகுதியாக அளிக்கப் பெற்றுள்ளன. ஒரு நுந்தா விளக்கினுக்கு விடப்பெறும் சாவா மூவாப்பசு 32-ஆகும். ஆடு ஆயின் 96 ஆகும். 96- ஆடுவிடுபவர் பொலிகிடா இரண்டும், பொலி மொத்தை இரண்டும் விடுவது வழக்கம். நுந்தா விளக்கேயன்றி சந்தி விளக்கும் வைப்பதுண்டு. ஒரு சந்தி விளக்குக்கு ஐந்து நற்பழங்காசு அளிப்பதுண்டு. 32 - பசுமாடு விடுபவர் ரிஷபம் ஒன்றையும் விடுவர். 29. திருக்கானப்பேர் இது காளையார் கோயில் என்று வழங்கப்பெற்று வருகிறது. சுந்தர மூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமாள் நாயனாரும் திருச் சுழியலில் எழுந்தருளியிருந்தபோது கானப் பேருடைய இறைவர், காளை வடிவங்கொண்டு, கையிற் பொற்செண்டும், திருமுடியில் சுழியமும் உடையவராய் இரவில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கனவில் தோன்றி யாம் இருப்பது கானப்பேர் என்று அருளிச்செய்ய, சுவாமிகள் உணர்ந்து "கண்டு தொழப்பெறுவது என்று கொலோ அடியேன் கார்வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே" என்னும் ஈற்றடியையுடைய பதிகத்தைப் பாடிக்கொண்டு வந்து வணங்கிய பதியாதல் பற்றி, இப்பெயர் (காளையார்கோயில்) பெற்றது. மானாமதுரை - திருச்சி இருப்புப்பாதையில் சிவகங்கை தொடர்வண்டி நிலையத்திற்கு 18. கி. மீ. தூரத்தில் இருக்கிறது. பாண்டி நாட்டுப் பாடல்பெற்ற பதிகளுள் பத்தாவது பதி. இறைவர் திருப்பெயர் - காளையீசுரர். இறைவி திருப்பெயர் - சொர்ணவல்லி. தீர்த்தம் - யானைமடு. காட்டானை வழிபட்ட தலம். இச்செய்தியை, "மானமா மடப்பிடி வன்கையாலலகிடக் கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்" என்னும் சம்பந்தப்பெருமானின், இவ்வூர்ப்பதிக அடிகளால் விளங்கும். இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் சுந்தரர்
|