பக்கம் எண் :

240
 

பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.

இவ்வூர்க் கோயிலில், பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவர்; மாறவர்மன், திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவன், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவர், இவர்கள் காலங்களிலும்; வாண அரசர்களில் சுந்தரத் தோளுடையான் மாவலி வாணராயர் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் சிவபெருமான் திருக்கானப்பேருடைய நாயனார், காளையர் சோமநாதர் எனவும், அம்மன் திருகாமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார் என்றும் கூறப்பெற்றுள்ளனர்.1

கோமாறபர்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவரின் பதினான்காம் ஆண்டுக் கல்வெட்டு இவ்வூரில் ஆலால சுந்தரன் திருமடம் ஒன்று இருந்ததைக் குறிப்பிடுகின்றது. இக்கோயிலில் உள்ள திருவீதி நாச்சியார் விக்கிரம பாண்டிய தேவரால் செய்து வைக்கப்பெற்றவராவர் இவ்விக்கிரம பாண்டிய தேவர் திருக்காம கோட்டத்து ஆளுடைய நாச்சியார்க்கும், திருவீதி நாச்சியார்க்கும், அமுதுபடி, சாத்துப்படி, திருப்பரிசட்டம் இவைகளுக்கும், விஷுவயன சங்கிரமம், திருக்கார்த்திகை இவைகளுக்கும், நாச்சியார்கோயில் திருப்பணிக்கும் நிவந்தங்கள் அளித்திருந்தான், மாவலிவாணாதிராயன் தன்பேரால் சுந்தரத் தோளுடையான் சந்தி ஒன்றை ஏற்படுத்தியிருந்தான். இவன் காலத்தில் தான் இறைவர் திருக்கானப்பேருடைய நாயனார் காளையர் சோமநாதர் எனக் கூறப்பெற்றுள்ளனர். இக்கோயிலிலுள்ள மேற்குத் திக்குமேல் ஸ்ரீகோமாற பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரதேவரின் 41-ஆம் ஆண்டுக் கல்வெட்டில் "தளியிலார் நக்கன் செய்யாளான காலிங்கராயத் தலைக்கோலிக்கு இறையிலி பிடிபாடுசெய்து கொடுத்த பரிசாவது" என்னும் தொடர் காணப்படுகிறது. இதில் தளியிலார் என்பவர் தேவரடியார் ஆவர். அவர்கள் தனிச்சேரிப் பெண்டுகள் எனவும் வழங்கப்பெறுவர். அவர் பெயர் முன்கொடுக்கப் பெற்ற நக்கன் என்னும் சொல்லால் அவர் சிவப்பணிக்கு உரியவர் என்பதும், தலைக்கோலி என்ற பட்டம் இருப்பதால் ஆடல் பாடலில் சிறந்தவர் என்பதும் பெறப்படுகின்றன. தலைக்கோல்பட்டம் அளிக்கப் பெற்றிருப்பதைச் சிலப்பதிகாரத்தாலும் அறியலாம்.


1. See the Annual Reports on South Indian Epigraphy for the year 1902, No. 575-587.

See also the South Indian Inscriptions, Volume VIII No. 166-184.