இவ்வூர் "திருக்கானப்பேர்க் கூற்றத்துத் திருக்கானப்பேர் எனக் குறிக்கப்பெற்றிருப்பதால், இது அக்காலம் ஒரு கூற்றத்தின் தலைநகராய் இருந்த செய்தி அறியக்கிடக்கின்றது. 30. திருக்கானாட்டுமுள்ளூர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் ஓமாம்புலியூர் என்னும் பாடல் பெற்ற தலத்துக்குக் கிழக்கே ஐந்து கி. மீ. தொலைவில் கொள்ளிடப் பேராற்றின் வட கரையில் இருக்கின்றது. இறைவர் :- பதஞ்சலி நாதர். இறைவி :- கானார்குழலி. இத்தலத்து இறைவரின் திருப்பெயர் பதஞ்சலி நாதர் என்றிருப்பதால், இத்தலம் பதஞ்சலியால் பூசிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்து. இத்தலத்துப் பதிகத்தில் பாராட்டப்படும் இயற்கைக் காட்சிகள் பன்முறையும் படித்து மகிழ்தற்குரியன.கல்வெட்டு : 1 இவ்வூர்க் கோயிலில் விக்கிரமசோழ தேவர், வீரராஜேந்திர தேவர், மூன்றாம் இராசேந்திர சோழர் இவர்கள் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இவ்வூர், விருதராச பயங்கர வள நாட்டு, கீழ்க்காநாட்டு முள்ளூராகிய திருச்சிற்றம்பலச் சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கப்பட்டுள்ளது. விருதராச பயங்கரன் என்பது முதற் குலோத்துங்க சோழனுடைய விருதுப் பெயர்களில் ஒன்று. இந்நாடு தெற்கே காவிரியிலிருந்து வடக்கே திருக்கெடிலம் வரையில் பரவியிருந்தது. இளக் கண்டிரம் என்னும் ஊரிலுள்ள செந்தாமரைக் கண்ணன்
1. See the Annual Reports on South Indian Epigraphy for the year 1926, No. 513-516.
|