பக்கம் எண் :

242
 

பட்டனாகிய வளவன் பிரமாதிராயன், தட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு நாள்வழிபாட்டிற்கு நிலம் அளித்துள்ளான். திருச்சிற்றம்பலத்துச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இறைவர்க்குத் திருவமுதுக்கு நிலம் அளித்திருந்தனர் என்னும் செய்திகள் இக்கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன.

31. திருக்குருகாவூர் வெள்ளடை

ஊரின் பெயர் குருகாவூர். இங்குள்ள கோயிலின் பெயர் வெள்ளடை. திருக்காடவூர் என்று வழங்கப்பெறுகின்றது. சீகாழிக்குக் கிழக்கே தென் திருமுல்லைவாயிலுக்குப் போகும் பெருவழியில் 4.5 கி. மீ. தெற்கே திரும்பினால் 1. கி. மீ. தூரத்தில் இருக்கிறது. காவிரி வடகரைத் தலங்களுள் 13 ஆவது ஆகும்.1

இறைவர்: வெள்ளடைநாதர். இறைவி திருப் பெயர் - காவியங்கண்ணி. இத்திருப்பெயரை ஞானசம்பந்தப் பெருந்தகையார் "காவியங்கண்ணி மடவாளோடுங் காட்டிடைத் தீயகலேந்தி நின்றாடுதிர்" என இவ்வூர் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

தீர்த்தம் - பால்கிணறு. இது திருக்கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தை அமாவாசையில், இறைவர் தீர்த்தங்கொடுக்கும் சமயத்தில் இக்கிணற்று நீர் பால் நிறமாக மாறும் அதிசயம் பொருந்தியது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தொண்டர் கூட்டத்துடன், சீகாழியிலிருந்து, இவ்வூர்க்கு எழுந்தருளுகையில், நீர்வேட்கையும், பசியும் அவரை வருத்திற்று. இறைவர் அந்தணராய் அருள்வடிவங் கொண்டு வழியில் தண்ணீர்ப்பந்தல் ஏற்படுத்தி அவர்களுக்குத் தண்ணீரும் கட்டமுதும் அளித்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் உண்டு உறங்குகையில், இறைவர் பந்தலோடு மறைந்தருளினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தூக்கத்தினின்று எழுந்து, "இத்தனையாமாற்றை யறிந்திலேன்" எனத் தொடங்கும் பதிகம்பாடி கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டார். இதற்கு ஏற்பப் "பாடுவார் பசி தீர்ப்பாய்" என்னும் குறிப்பும் இவ்வூர்ப் பதிகத்தில் காணப்பெறுகின்றது. தொண்டர்களுக்கு அமுது ஊட்டிய இடம் "வரிசைப்பற்று" என்னும் பெயரால் வழங்கப்பெறுகின்றது. கட்டமுது அளித்தருளிய விழா


1. See the Annual Reports on South Indian Epigraphy for the year 1918, Numbers 424to441.