ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பௌர்ணமியில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவ்வூர்க்கோயிலில், முதலாம் இராஜேந்திர சோழன், முதற்குலோத்துங்கன், விக்கிரம சோழன், பரகேசரி வர்மராகிய குலோத்துங்க சோழன் மதுரையும் ஈழமும் கொண்டருளின இராச கேசரிவர்மனாகிய திரிபுவன சக்கரவர்த்தி இராஜாதிராஜ தேவன் இவர்களால் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர், திருக்குருகாவூர் திரு வெள்ளடை மகாதேவர், திருக்குருகாவூர் திருவெள்ளடை ஆண்டார், திருக்குருகாவூர் வெள்ளடையப்பர் எனக் கூறப்பெற்றுள்ளனர். எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனியும் பிரதிமைகளும் : இத்திருக்கோயிலில் சந்திரசேகர தேவரை எழுந்தருளுவித்து, அவர்க்கு நாள் வழிபாட்டிற்கு நிபந்தம் அளித்தவர், மணிகொண்ட சோழப்பட்டணத்து, சாத்தன்மண்டை ஆவர், இது நிகழ்ந்தது சக்கரவர்த்தி குலோத்துங்க சோமதேவரின் பதினைந்தாம் ஆண்டாகும். இக்கோயிலில் மூவர் முதலிகளைப் பிராகாரத்தில் எழுந்தருளுவிக்கப் பெற்ற காலம் குலோத்துங்கசோழ தேவரின் பதின்மூன்றாம் ஆண்டாகும். திருமடம் : இவ்வூரில் திருச்சிற்றம்பலமுடையான் மடம் என்னும் பெயருடைய மடமொன்றிருந்தது. அதில் மாகேஸ்வரர்களுக்கும், அபூர்விகளுக்கும், உணவளிக்கும்பொருட்டுக் குலோத்துங்க சோழ வள நாட்டு வேளாநாட்டுப் பிரம்பூருடையான் திருச்சிற்றம்பல முடையானான விழுப்பரையனால் நிலம் அளிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி பரகேசரி வர்மனாகிய விச்சிரமசோழனின் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டில் கூறப்பெற்றுள்ளது. இவ்வூரைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு : இவ்வூர் இராஜாதிராஜ வளநாட்டுத் திருவாலிநாட்டுக் குருகாவூர் எனக்கூறப்பட்டுள்ளது. இத்திருவாலிநாடு, மதுரையும் ஈழமும் கொண்டருளிய இராஜகேசரிவர்மனாகிய திரிபுவனச்
|