பக்கம் எண் :

247
 

உள்ள கல்வெட்டு, திருக்கோடிக்குழகர், திருவகத்தியான்பள்ளி இவைகளைக் குறிப்பிடுகின்றது. அது ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டானின் கல்வெட்டு.

36. கோயில் (சிதம்பரம்)

கோயில் என்பது எல்லா ஆலயத்திற்கும் பொதுப்பெயர். அதுவே சிறப்புப் பெயராகக் குறிப்பிட்ட ஒரு தலத்தைக் குறிக்குமானால் அது அதனுடைய மிக்க உயர்வைக்குறிக்கும். அங்ஙனம் உயர்வுபற்றிய காரணத்தால் இத்தலம் கோயில் என்னும் பெயர் பெற்றது.

இத்தலத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள் :- (1) பெரும்பற்றப் புலியூர் - பெரும்பற்றினால் புலிப்பாதன் பூசித்த ஊராதலால் இப்பெயர் பெற்றது. இது மரூஉ மொழி. மலையமான்நாடு மலாடு என்பதுபோல.

(2) சிதம்பரம் - (சித் + அம்பரம்) சித் = அறிவு, அம்பரம் = வெட்டவெளி. ஞானகாசம் ஆதலால் இப்பெயர்பெற்றது.

(3) தில்லைவனம் :- தில்லை என்னும் மரமடர்ந்த காடாயிருந்ததால் இப்பெயர் பெற்றது. இவைகளன்றி, வியாக்கிரபுரம், புண்டரீகபுரம், பூலோக கைலாசம் என்னும் வேறு பெயர்களும் உண்டு.

கடலூரிலிருந்து, மயிலாடுதுறை செல்லும் இருப்புப் பாதையில் இருக்கும் சிதம்பரமென்னும் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி வடமேற்கே 1.5 கி. மீ. சென்றால் இக்கோயிலை அடையலாம். இது காவிரியாற்றின் வடகரையிலுள்ள தலங்களுள் முதன்மை பெற்றது.

திருமூலட்டானக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருப்பெயர் - அருள்மிகு மூலநாதர். இறைவியின் திருப்பெயர் - உமையம்மை. சிற்றலம்பலத்தில் ஆனந்தத்தாண்டவம் புரியும் இறைவரின் திருப்பெயர் - நடராசர், கூத்தப்பெருமான்.

இங்கு நடராசப்பெருமானை சகளம் என்றும், ரகசிய தானத்தை நிஷ்களம் என்றும், ஸ்படிகலிங்கத்தை சகளநிகளன் எனவும் கூறுவர்.