கேட்ட ஆருரர் தம் முடியில் திருவடி வைத்தருளியவர் சிவபிரானே என்று தெளிந்து தம் பொருட்டு எளிவந்தருளிய எம்பெருமானைக் காணப்பெற்றும் "அறியாமையால் இறுமாந்து இகழ்ந்துரைத்தேனே" என்று வருந்தித் "தம்மானை அறியாத சாதியார் உளரே" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித்துதித்தார். மறுநாட்காலை திருக்கெடில நதியில் நீராடி வீரட்டானேஸ்வரரை வணங்கி அங்கிருந்து புறப்பட்டுத் திருமாணிகுழி, திருத்தினை நகர் முதலிய தலங்களைத் திருப்பதிகம் பாடித் துதித்துத் தில்லைப் பதியின் எல்லையை அடைந்தார். தில்லைச் சிற்றம்பலவனைத் தரிசித்தல் : வடதிசை வாயில் வழியாகத் தில்லையில் புகுந்து சிவனடியார்கள் எதிர்கொள்ளத் திருவீதியை வலம்வந்து வணங்கித் திருக்கோயிலுக்குட் சென்று பேரம்பலத்தை வலஞ்செய்து திருச்சிற்றம்பலத்தின் முன்னேயுள்ள திருவணுக்கன் திருவாயிலையடைந்தார். அருட்கூத்தாடும் அம்பலவனைக் கண்டு அன்புமீதூரத் தலைமேற் குவித்த கையினராய்த் திருக்களிற்றுப்படியின் மருங்கே வீழ்ந்து வணங்கினார். ஐம்பொறிகளின் அறிவெலாம் கண்களே கொள்ளத் திருக் கூத்தியற்றும் பேரின்ப வெள்ளத்திலே திளைத்து மகிழ்ச்சியினால் மனம் மலரப் பெற்றார். கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரியக் கைகளை உச்சிமேல் குவித்து இன்னிசைத் திருப்பதிகம் பாடி இறைவனைப் பரவினார். தில்லைச் சிறறம்பலவன் திருவருளால் "நீ திருவாரூரில் நம்பால் வருக" என்ற அருள்மொழி அசரீரியாய் எழுந்தது. அவ்வருளாணையைச் சிரமேற்கொண்டு நடராசப் பெருமானைத் தொழுது விடைபெற்றுத் தென்திசை வாயில்வழியாகப் புறப்பட்டு வழியிடையேயுள்ள கொள்ளிடத் திருநதியைக் கடந்து திருக்கழுமலமென்னும் சீகாழியின் எல்லையை அடைந்தார். காழியில் தோணியப்பர் காட்சி : உமையம்மையளித்த திருமுலைப்பாலாகிய அமுதத்தை உண்டு உலகம் உய்யத் திருநெறிய தெய்வத் தமிழ் பாடியருளிய திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித் தருளிய இடமாதலால் அத்தலத்தைத் தம் பாதங்களால் மிதித்தல் கூடாதெனக் கருதிப் புற எல்லையை வணங்கி வலஞ்செய்தார் சுந்தரர். ஆரூரரின் அன்பின்
|