35. திருப்புறம்பயம் பதிக வரலாறு: வன்றொண்டர், திரு ஆறைமேற்றளி முதலான பல தலங்களை வணங்கிக் கொண்டு திரு இன்னம்பர் சென்று வணங்கி அங்கு இருக்கும் நாளில் திருப்புறம்பயத்திற்குச் செல்ல வேண்டும் என்னும் அன்பு உண்டாகப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 பெரிய. புரா. ஏயர். புரா. 96) குறிப்பு: இத் திருப்பதிகம், இறைவர் எழுந்தருளியுள்ள தலங்கள் பல வற்றையும் சென்று வணங்க வேண்டும் என்னும் குறிப்பினால் அருளிச் செய்தது. பண்: கொல்லி பதிக எண்: 35 திருச்சிற்றம்பலம் 351. | அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி | | நின்றும் போந்துவந் தின்னம்பர்த் | | தங்கி னோமையும் இன்ன தென்றிலர் | | ஈச னாரெழு நெஞ்சமே | | கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் | | ஏத்தி வானவர் தாந்தொழும் | | பொங்கு மால்விடை ஏறி செல்வப் | | புறம்ப யந்தொழப் போதுமே. | | 1 |
1. பொ-ரை: மனமே, ஆறங்கங்களையும் ஓதியவராகிய அந்தணர்களது திருவாறைமேற்றளியினின்றும் புறப்பட்டு வந்து திருவின்னம்பரில் பலநாள் தங்கியும் நம்மை இங்குள்ள இறைவர் இனி நாம்செய்யத்தக்கது இன்னது என்று தெளிவித்தாரில்லை; ஆதலின், வானவர்கள் தம் நிலையினும் மேன்மேல் உயர்தற் பொருட்டு இரவெல்லாங் காத்து நின்று விடியலில் ஏத்தித் தொழுகின்ற, அழகு மிக்க பெரிய விடையை ஏறும் பெருமானது, செல்வம் நிறைந்த திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்; புறப்படு. கு-ரை: உம்மை, சிறப்பு. 'இன்னதென எடுத்துச் சொல்லாமையின், இயல்பாக நாம் செய்யும் பணியைச் செயற்பாலம்' என்றபடி.
|