39. பொது (திருத்தொண்டத் தொகை) பதிக வரலாறு: திருவாரூரில் பரவை நாச்சியாரை மணந்து வீற்றிருக்கும் நாவலூரர் திருவாரூர்த் திருக்கோயிலுக்குச் செல்லும்பொழுது தேவாசிரிய மண்டபத்துள்ள அடியவர்களுக்கு அடியேனாகப் பண்ணும் நாள் எந்நாள் என்று பெருமான் திருவடிமலர்களைப் பரவிச்சென்றார். பெருமான் அடியவர்கள் வழித்தொண்டை உணர நல்கி அவர் தம் பெருமையையும் கூறி அவர் தம்மைப் பாடுக, என அருளியபொழுது, 'யான் எவ்வாறு பாடுவேன்' என்றுகேட்டு, இறைவன், ''தில்லைவாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்'' என்று அடியெடுத்துக்கொடுக்க, ஒவ்வொரு நாயனாருக்கும் தனித்தனியே ''அடியேன்'' என்று சொல்லிப் பாடியருளியது இத்திருப்பதிகம். நாயன்மார் வரலாறுகளனைத்தும் இதில் தொகையாக அமைந்துள்ளன. (தி.12 பெரிய. புரா. தடுத். புரா. 199) குறிப்பு: இத்திருப்பதிகம், சிவபெருமானுக்குச் செய்யும் அடிமைத் திறத்திற்கு எல்லையாய் நின்ற திருத்தொண்டர்களது தொண்டின் பெருமையைத் தொகுத்து அருளிச்செய்தது என்பதும், அங்ஙனம் அருளிச்செய்யுமிடத்து, அப்பெருமையை, உணர்த்தும் முறையான் அருளாது, ஒவ்வொருவர்க்கும் தனித்தனியே 'அடியேன்' எனக் கூறிப் போற்றும் வணக்க முறையான் அருளிச் செய்யப்பட்டதென்பதும், அத்திருத்தொண்டர்கள் தாம், 'தொகையடியாரும், தனியடியாரும்' என இருதிறத்தர் என்பதும், அவருள் தொகையடியார் ஒன்பதின்மரும், தனியடியார் அறுபத்திருவர் என்பதும், நம்பியாரூரர் இங்குத் தம்மை ஒரு தனியடியாராக ஓதாதுவிடினும், 'ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆள்' என்றும், 'எல்லா அடியவர்க்கும் அடியவர் என்றும்' அருளிச் செய்தமையால், அவருங்கூட, தனியடியார் அறுபான்மூவராயினர் என்பதும் அனைவரும் அறிந்தவை. இதன் எல்லாத் திருப்பாடல்களிலும், இறுதிக்கண் உள்ள, 'ஆரூரன் ஆரூ ரில் அம்மானுக்கு ஆள்' என்றதனை முதலில் வைத்து, 'திருவாரூரில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு ஆளாய் உள்ள நம்பியாரூரனாகிய யான், தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என்றாற்போல இயைத்துப் பொருள் கொள்க. ''ஆரூரன்'' என்றது, தன்மைக்கண் படர்க்கை
|