634. | பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப் | | பெரிய எம்பெரு மான்என்றெப் போதும் | | கற்ற வர்பர வப்படு வானைக் | | காணக் கண்அடி யேன்பெற்ற தென்று | | கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக் | | குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன் | | நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார் | | நன்னெறிஉல கெய்துவர் தாமே. | | 11 |
திருச்சிற்றம்பலம்
பயனின்மை யறிக. இத் திருப்பதிகத்துள், "நல்ல கம்பன்", "கள்ளக் கம்பன்" என வந்தவையும், அம்மை வழிபட்ட நிலையைக்கருதி அருளினவே யாதலின், அவற்றை உருத்திரர் வழிபட்ட நிலை, திருமால் வழிபட்ட நிலைகளாகக் கூறும் புராண வரலாற்றோடு இயைக்க முயலுதல் பொருந்தாமை யறிக. 11. பொ-ரை: குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூரனாகிய நம்பியாரூரன், ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும், மெய்ந்நூல்களைக் கற்றவர்கள், 'இவன் எம் பெரிய பெருமான்' என்று எப்போதும் மறவாது துதிக்கப்படுபவனும், யாவர்க்கும் தலைவனும், கூத்தாடுதலை உடையவனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன், கண்பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர். நன்னெறியாற்பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர். கு-ரை: 'பெற்ற' எனக் கெடுதற்பாலதாகிய மகரம், செய்யுளின்பம் நோக்கிக் கெடாதுநின்றதென்க. இனி, 'பெற்றவேறு' என்பதே பாடம் எனினுமாம். இவ்வாறன்றி, 'பெற்றத்தை ஏறுதலை உகந்து ஏற வல்லானை' என்றுரைத்தல் சிறவாமையறிக. "பெரிய பெருமான்" என்றதனை, "பெரிய பெருமானடிகள்" (தி. 7 ப. 53.) என்றது போலக் கொள்க. நன்னெறி, ஞானநெறி; அதனாற் பெறும் உலகம், சிவலோகம்.
|