பக்கம் எண் :

திருவாசகம்
213


விளக்கம் : யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடைய நீ யாவர்க்கும் கீழாம் அடியேனை ஆட்கொண்டு அடிமையாக்கினாய் என்பார், 'என் பெருங்கருணையாளனே' என்று வணங்குகின்றார். அவ்விறைவனே எல்லாப் பொருள்களும் தோன்றுதற்கும் ஒடுங்குதற்கும் காரணன் ஆதலின், 'ஆதியும் அந்தம் ஆயினாய்' என்றார். எல்லாப் பொருள்களையுமுடைய இறைவனன்றித் தமக்கு ஒரு பற்றுக்கோடு இன்று' என்பார், 'பற்று மற்றெனக் காவதொன்றினி உடையனோ' என்று இறைவனையே கேட்கிறார்.

இதனால், எல்லாப் பொருள்களையும் உடைய இறைவனே உயிர்களுக்குப் பற்றுக்கோடு என்பது கூறப்பட்டது.

97

அப்ப னேஎனக் கமுத னேஆ னந்த னேஅகம் நெகஅள் ளூறுதேன்
ஒப்ப னேஉனக் குரிய அன்பரில் உரிய னாயுனைப் பருக நின்றதோர்
துப்ப னேசுடர் முடிய னேதுணை யாள னேதொழும் பாளர் எய்ப்பினில்
வைப்ப னேஎனை வைப்ப தோசொலாய் நைய வையகத் தெங்கள் மன்னனே.

பதப்பொருள் : எனக்கு அப்பனே - எனக்குத் தந்தையே, அமுதனே - அமிர்தம் போல்பவனே, ஆனந்தனே - ஆனந்தத்தை உடையவனே, அகம் நெக - மனம் உருகும்படியாக, அள் ஊறு தேன் ஒப்பனே - உடலுக்குள் சுரக்கின்ற தேனை நிகர்ப்பவனே, உனக்கு உரிய அன்பரில் - உனக்கு உரிமையுடைய அன்பரைப் போல, உரியன் ஆய - உரிமையுடையேனாய், உனைப் பருக - உன்னை நுகரும் வண்ணம், நின்றது - நின்றதாகிய, ஓர் துப்பனே - ஒரு துணையாய் உள்ளவனே, சுடர் முடியனே - ஒளி பொருந்திய முடியை உடையவனே, துணை ஆளனே - துணையாய் இருப்பவனே, தொழும்பு ஆளர் - தொண்டர்களுக்கு, எய்ப்பினில் - இளைத்த காலத்தில், வைப்பனே - சேமநிதி போல்பவனே, எங்கள் மன்னனே - எங்கள் வேந்தனே, என்னை - அடியேனை, வையகத்து - உலகத்தில், நைய வைப்பதோ - வருந்தும்படி வைப்பது தகுதியோ, சொலாய் - சொல்வாயாக.

விளக்கம் : துன்பம் நேர்ந்த போது உதவுவான் துணைவன். இளைத்த காலத்தில் உதவுவது சேமநிதி. இரண்டுமாய் இருக்கும் இறைவன் தம் துன்பத்தைத் துடைத்து அருள வேண்டும் என்பார், 'எனை நைய வையகத்து வைப்பதோ சொலாய்' என்றார். 'அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை' என்றார் திருநாவுக்கரசரும்.

இதனால், இறைவன் அடியார்க்கு அருந்துணையாய் இருந்து உதவுகிறான் என்பது கூறப்பட்டது.

98