பக்கம் எண் :

திருவாசகம்
225


அமுதமே, என் மது வெள்ளமே - என் மதுக்பெருக்கே, கடலினுள் கடல் நீரில், நாய் நக்கி ஆங்கு - நாய் நக்கிப் பருகினது போல, உன் கருணைக்கடலின் - உனது கருணைக்கடலினுள்ளே, உள்ளம் விடல் அரியேனை - உள்ளத்தை அழுந்திச் செல்ல விடாத என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ!

விளக்கம் : இறைவனுக்கு அடியாரது உடல் ஆலயமாதலின், 'அடியார் உடல் இலமே மன்னும்' என்றார். 'உடல் இடம் கொண்டாய்' என்று அடிகள் பின்னரும் கூறுவார். 'ஊனுடம்பு ஆலயம்' என்ற திருமூலர் வாக்கையும் காண்க.

கடல் நீர் மிகுந்து இருந்தாலும் நாய் நக்கித்தான் பருகுமேயன்றி வாய் திறந்து நிரம்பப் பருகாது. அதைப் போல, உனது கருணை வெள்ளம் மிகுந்து இருந்தாலும் யான் அழுந்திப் பருகாதிருக்கின்றேன் என்பார், 'கடலினுள் நாய் நக்கி யாங்குன் கருணைக் கடலினுள்ளம் விடலரி யேனை' என்றார்.

இதனால், இறைவனது கருணை ஏகவுருவாய்ப் பரந்து கிடப்பினும் உயிரினது தன்மைக்கேற்பத்தான் அதைப் பெற முடியும் என்பது கூறப்பட்டது.

13

வெள்ளத்துள் நாவற்றி யாங்குன் அருள்பெற்றுத் துன்பத்தின்றும்
விள்ளக்கி லேனை விடுதிகண் டாய்விரும் பும்அடியார்
உள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
கள்ளத்து ளேற்கரு ளாய்களி யாத களிஎனக்கே.

பதப்பொருள் : விரும்பும் அடியார் - விரும்புகின்ற அடியாருடைய, உள்ளத்து உள்ளாய் - உள்ளத்தில் நிலைத்திருப்பவனே, மன்னும் - நிலை பெற்றிருக்கின்ற, உத்தரகோச மங்கைக்கு - திருவுத்தரகோச மங்கைக்கு, அரசே - தலைவனே, வெள்ளத்துள் - நீர்ப்பெருக்கின் நடுவில் இருந்தே, நா வற்றியாங்கு - ஒருவன் நீர் பருகாது தாகத்தால் நா உலர்ந்து போனாற்போல, உன் அருள் பெற்று - உன்னருள் பெற்றிருந்தே, துன்பத்து - துன்பத்தினின்றும், இன்றும் விள்ளக்கிலேனை - இப்பொழுதும் நீங்குவதற்கு ஆற்றல் இல்லாதிருக்கின்ற என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ! கள்ளத்துளேன் எனக்கு - வஞ்சகச் செயலுடையேனாகிய எனக்கு, களியாத களி அருளாய் - இதுகாறும் கண்டறியாத பேரின்பத்தைத் தந்தருள்க.

விளக்கம் : கரை புரண்டு ஓடும் பெருவெள்ளத்தின் இடையே ஒருவன் தாக விடாயினால் நாவரட்சி கொண்டு வருந்துவானேயானால் அஃது அவன் அந்நீரைப் பருகித் தாகத்தைத் தணித்துக் கொள்ள மாட்டாத குறையேயன்றி வேறில்லை. அது போல, உனது கருணைப் பெருக்கை யான் பெற்றிருந்தும் உலகத் துன்பத்தினால் வருந்துவது, அதனை அனுபவிக்க மாட்டாத குறையேயன்றி