80. தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான வுண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப 85. ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே 90. தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் 95. பல்லோரும் ஏத்தப் பணிந்து. திருச்சிற்றம்பலம் சிவனது அநாதி முறைமையான பழமை அஃதாவது, சிவபிரான் உயிர்களை உய்வித்தற்பொருட்டு அளவில்லாத காலமாகச் செய்து வருகின்ற திருவருட்செயலின் முறைமை என்பதாம். நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க 5. ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க பதப்பொருள் : நமச்சிவாய வாழ்க - திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க; நாதன் தாள் வாழ்க - திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க; இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க - இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க;
|