கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க 10. சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க பதப்பொருள் : வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க - மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி மேம்படுக; பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க - பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் மேம்படுக; புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க - தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் மேம்படுக; கரம் குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க - கை கூம்பப்பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் மேம்படுக; சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க - கைகள் தலைமேல் கூம்பப்பெற்றவரை உயரப் பண்ணுகிற சிறப்புடையவனது திருவடி மேம்படுக. விளக்கம் : மன ஓட்டத்தைத் தவிர்ப்பவனும், பிறவித் துன்பத்தை நீக்குபவனும் இறைவனே என்பது, "வேகங் கெடுத்தாண்ட வேந்தன்", "பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்" என்பவற்றால் விளங்கும். பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்; பிறை, கங்கை, அரவம் முதலியன தலைக்கோலங்கள். இறைவன் தன்னை நினையாதவரைத் தனக்கு வேறானவராகவே வைத்துச் சிறிதும் விளங்கித் தோன்றாதிருத்தலின், "புறத்தார்க்குச் சேயோன்" என்றார். இறைவன் விரும்பியிருக்குமிடங்கள் இரண்டு. ஒன்று, நெஞ்சத்தாமரை; மற்றொன்று, துவாதசாந்தப் பெருவெளி; அஃதாவது, தலைக்குப் பன்னிரண்டு அங்குலங்களுக்குமேலுள்ள இடம். இவ்விரண்டு இடங்களிலும் இறைவனை நினைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிப்பிட, "கரங்குவிவார், சிரங்குவிவார்" என்று கூறினார். இவற்றால் இறைவன் வெற்றி கூறப்பட்டது. ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி 15. சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி பதப்பொருள் : ஈசன் அடி போற்றி - ஈசனது திருவடிக்கு வணக்கம், எந்தை அடி போற்றி - எம் தந்தையினது திருவடிக்கு
|