பக்கம் எண் :

திருவாசகம்
250


இதனால், இறைவனது புகழைப் பலவாறு துதித்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

46

பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து
விழித்திருந் தேனை விடுதிகண் டாய்வெண் மணிப்பணிலம்
கொழித்துமந் தாரமந் தாகினி நுந்தும்பந் தப்பெருமை
தழிச்சிறை நீரிற் பிறைக்கலம் சேர்தரு தாரவனே.

பதப்பொருள் : மந்தாகினி - ஆகாய கங்கை, வெள் மணி - வெண்மையான மணியாகிய முத்தினையும், பணிலம் - சங்கினையும், கொழித்து - ஒதுக்கி, மந்தாரம் - மந்தார மலர்களை, நுந்தும் - தள்ளுகின்ற, பந்தப் பெருமை தழி - அணையாகிய பெருமைகளைப் பொருந்திய, சிறைநீரில் - சிறைப்பட்ட அந்நீரில், பிறைக்கலம் சேர்தரு - பிறையாகிய தோணி சேர்தற்கிடமாகிய, தாரவனே - கொன்றை மாலையையுடையவனே, பழிப்பு இல் - பழிப்பற்ற, நின்பாதம் - உன் திருவடியின், பழந்தொழும்பு எய்தி - பழந்தொண்டினை அடைந்து, விழ - அது நழுவி விழ, பழித்து - உன்னை நிந்தித்துக்கொண்டு, விழித்திருந்தேனை - திகைத்திருந்த என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ!

விளக்கம் : கங்கையால் தள்ளப்பட்ட முத்து, சங்கு, மந்தார மலர் முதலியவற்றையே, பந்தம் - அணை என்றார். தேவ கங்கை இறைவன் சடையில் தங்குதலால், 'சிறைநீர்' என்றார். பிறையின் உருவம் தோணி போன்று இருத்தலால், 'பிறைக்கலம்' என்றார். இறைவன் அருள் வழங்கும் வள்ளல் என்பதை, 'சிறைநீரிற் பிறைக்கலம்' காட்டுகிறது.

பழமையான தொண்டினை அடைந்தும் வினைவயத்தால் இழந்தேன் என்பார், 'பழந்தொழும்பெய்தி விழ' என்றார். அதனை இழந்த துன்பத்தால் வருந்தி வைதேன் என்பார், 'பழித்து விழித்திருந்தேனை' என்றார். 'தழுவி' என்பது, 'தழி' என மருவி நின்றது.

இதனால், இறைவன் வைதாரையும் வாழ வைப்பான் என்பது கூறப்பட்டது.

47

தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழலரப்பூண்
வீரஎன் றன்னை விடுதிகண் டாய்விடி லென்னைமிக்கார்
ஆரடி யான்என்னின் உத்தர கோசமங் கைக்கரசின்
சீரடி யார்அடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே.

பதப்பொருள் : தாரகை போலும் - நட்சத்திரம் போல, தலை - தலையில், தலைமாலை - தலைமாலையையும், தழல் அரப் பூண் - நெருப்பில் தோன்றிய பாம்பாகிய ஆபரணத்தையும் அணிந்த, வீர - வீரனே, என்தன்னை விடுதி - என்னை