பக்கம் எண் :

திருவாசகம்
255


பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.

பதப்பொருள் : நேர் இழையாய் - சிறந்த அணிகளை அணிந்தவளே, இராப்பகல் - இரவும் பகலும், நாம் பேசும் போது எப்போது - நாம் பேசும் பொழுது எப்பொழுதும், பாசம் - என் அன்பு, பரஞ்சோதிக்கு என்பாய் - மேலான ஒளிப்பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய், இப்போது - இப்பொழுது, ஆர் அமளிக்கே - அருமையாகிய படுக்கைக்கே, நேசமும் வைத்தனையோ - அன்பு வைத்தனையோ, (என்று எழுப்பியவர் கூற, எழுப்பப்பட்டவள் கூறுவாள்) நேர் இழையீர் - பெண்களே, சீசி - சீச்சீ, இவையும் சிலவோ - நீங்கள் பேசும் நகைமொழிகளில் இவையும் சிலவாகுமோ? விளையாடி - என்னோடு விளையாடி, ஏசும் இடம் ஈதோ - பழித்தற்குரிய சமயம் இதுதானோ, (என்று எழுப்பப்பட்டவள் கூறிய பின் எழுப்பியவர் கூறுவர்) விண்ணோர்கள் - தேவர்கள், ஏத்துதற்கு - வழிபடுவதற்கு, கூசும் - நாணுகின்ற, மலர்ப்பாதம் - தாமரை மலர் போன்ற திருவடியை, தந்தருள - அன்பருக்குக் கொடுத்தருள, வந்தருளும் - எழுந்தருளின, தேசன் - ஒளி உருவனும், சிவலோகன் - சிவபுரத்தவனும், தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு - தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு, அன்பு ஆர் - அன்பு பொருந்திய, யாம் யார் - நாம் உனக்கு யார்? (அயலவர் அல்லவே)

விளக்கம் : இப்பாடல் உரையாடலாயுள்ளது. பஞ்சணை மேல் நேசம் வைத்தனையோ என்ற கூற்று நகைமொழியாம். விண்ணோர்கள் பயன் கருதி வழிபடுபவர்களாதலின், இறைவன் திருவடியைப் புகழும் பொழுது நாணத்துடன் புகழ்வார்கள் என்பதற்கு, ‘விண்ணோர்கள் ஏத்துவதற்குக் கூசு மலர்ப்பாதம்’ என்றனர். இதனை,

‘‘வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்; மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாம் தொழவேண்டி’’

என அடிகள் முன்பு அருளிச்செய்ததனால் அறிக. இறைவனிடம் அன்பு பொருந்திய நாம் நமக்குள் அயலவர் அல்லவே? ஆதலால், எள்ளி நகையாட மாட்டோம் என்பார், ‘அன்பார் யாம் ஆர்?’ என்று கூறினார்.