பிறவியும் வேண்டுவதே என்றார் திருநாவுக்கரசரும். நரியைப் பரியாக்கி வந்த வரலாறு கீர்த்தித் திருவகவலில் கூறப்பட்டது. இதனால், இறைவன் எளிமையாய் வந்து அருள் செய்வது மண்ணுலகில்தான் என்பது கூறப்பட்டது. 3 வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கானின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட் டூன்வந் துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன்வந் தமுதின் தெளிவின் ஒளிவந்த வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். பதப்பொருள் : வான்வந்த தேவர்களும் - விண்ணுலகத்திலுள்ள தேவர்களும், மால் அயனோடு இந்திரனும் - திருமால் பிரமன் இவர்களோடு இந்திரனும், கான் நின்று வற்றியும் - தவம் புரியக் காட்டில் நின்று உடல் மெலிந்தும், புற்று எழுந்தும் - தம்மீது புற்று வளரப்பெற்றும், காண்பு அரிய - காணுதற்கு அருமையான கடவுள், தான் வந்து - தானே எழுந்தருளி வந்து, நாயேனை - நாய் போன்ற என்னை, தாய்போல் தலையளித்திட்டு - தாய் போலப் பேரன்பு செய்தமையால், ஊன் உரோமங்கள் வந்து - உடம்பில் மயிர் சிலிர்க்க, உள்ளே உயிர்ப்பு எய்து - உள் நின்றும் மூச்சு எழுதற்குரிய, தேன் வந்து - தேனின் தன்மையுடையதாய, அமுதின் தெளிவின் - அமுதத்தின் தெளிவு போல, ஒளி வந்த - ஒளி விளங்கிய, வான்வந்த - மேன்மை தங்கிய, வார்கழலே - நீண்ட கழலணிந்த திருவடியின் புகழையே, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக. விளக்கம் : ஊண் உறக்கமின்றித் தவம் புரிவதை, ‘கானின்று வற்றியும்’ என்பதனாலும் தம்மை மறந்து தவம் புரிதலைப் ‘புற்றெழுந்தும்’ என்பதனாலும் உணர்த்தினார். மயிர் சிலிர்த்தலும் நெட்டுயிர்ப்பு எய்தலும் இன்ப மிகுதியில் தோன்றுவன. திருக்காளத்தி மலையில் கண்ணப்பர் ஏகநாயகரைக் கண்டபோது பெருமூச்சு உண்டாக மயிர்க்கால்தொறும் புளகாங்கிதம் அடைய நின்றதைச் சேக்கிழார் சுவாமிகள், ‘’நெடிதுபோ துயிர்த்து நின்று நிறைந்தெழு மயிர்க்கால் தோறும் வடிவெலாம் புளகம் பொங்க’’ நின்றார் எனக் கூறியதை ஒப்பிட்டுக்கொள்க. ‘தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த வான்வந்த’ என்பன நண்ட கழலின் பெருமையைக் காட்ட வந்தன. தேன் போலும் இனிமையும், அமுதின் தெளிவு போலும் நன்மையும்,
|