இதனால், இறைவன் தன் அடியார்களுக்கு அந்தமில் இன்பத்தை அருளுதல் கூறப்பட்டது. 9 விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத் தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப் பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய். பதப்பொருள் : விண் ஆளும் - விண்ணுலகத்தை ஆளுகின்ற, தேவர்க்கும் - தேவர்களுக்கும், மேல் ஆய - மேலாகிய, வேதியனை - அந்தணனும், மண் ஆளும் - மண்ணுலகத்தை ஆளுகின்ற, மன்னவர்க்கும் - அரசர்களுக்கும், மாண்பு ஆகி நின்றானை - மேன்மை தரும் பொருளாகி நின்றவனும், தண்ணார் - குளிர்ச்சி பொருந்திய, தமிழ் அளிக்கும் - தமிழை வளர்க்கிற, தண் பாண்டி நாட்டானை - குளிர்ச்சி பொருந்திய பாண்டி நாட்டையுடையவனும், பெண் ஆளும் பாகனை - உமை நங்கை தங்கிய ஒரு பாகத்தை உடையவனும், பேணு பெருந்துறையில் - யாவரும் விரும்புகிற திருப்பெருந்துறையில், கண் ஆர் - அழகு பொருந்திய, கழல் காட்டி - தன் திருவடியைக் காட்டி, நாயேனை ஆட்கொண்ட - நாயனைய என்னை அடிமைகொண்ட, அண்ணாமலையானை - திருவண்ணாமலையில் இருப்பவனும் ஆகிய இறைவனது புகழை, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக. விளக்கம் : தமிழ், இனிமையுடையதாதலின், ‘தண்ணார் தமிழ்’ என்றார். பாண்டிநாடு செழுமையுடையதாதலின், ‘தண் பாண்டிநாடு’ என்றார். தண்பாண்டி நாட்டை ஆண்டது: உமாதேவி மதுரையில் பாண்டியனுக்கு மகளாய்த் திரு அவதாரம் செய்து, தடாதகை என்னும் பெயருடன் அரசாட்சி புரிந்து வந்தாள்; அப்பொழுது திக்கு விஜயம் செய்ய வடக்கு நோக்கிப் புறப்பட்டாள்; கயிலைக்கு வந்து இறைவனைக் கண்டாள்; காணலும், தனக்கிருந்த மூன்று தனங்களில் ஒன்று மறையவே, இவரே தன் நாயகர் என உணர்ந்து, நாணங் கொண்டு மதுரைக்குத் திரும்பினாள். இறைவனும் மதுரைக்கு வந்து, அவளை மணந்து, சோமசுந்தர பாண்டியனாய்ச் செங்கோலோச்சினான் (திருவிளையாடற் புராணம்). இவ்வாறு அரசனாய் இருந்து ஆட்சி செய்து காட்டிய செயலைக் கருதியே, முன்பு, ‘மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானை’ என்றார். இதனால், இறைவனது பெருமை கூறப்பட்டது. 10
|