விளக்கம் : நவதானியங்களை நீர் விட்டு முளையாக்கி வைக்கப்பட்ட மட்கலம் முளைப்பாலிகை எனப்படும். முத்து மாலை பூமாலை தொங்க விடுதல், முளைக்குடம் தூபம் தீபம் வைத்தல் ஆகிய இவை இறைவன் வருவதற்கு முன் செய்து வைத்தல். இனிப் பல்லாண்டு இசைத்தல் கவரி கொள்ளல் இல்லத்துக்கு வந்த பின்னர் முறையாக நிகழும். சத்தி முதலியவர் தேவியின் பேதங்கள், பல்லாண்டு இசைத்தலாவது ‘பல்லாண்டு வாழ்க’ எனப் பாடுதல். இதனால், இங்கு இறைவனுக்குரிய உபசாரம் கூறப்பட்டது. 1 பூவியல் வார்சடை எம்பிராற்குப் பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்னகண்ணீர் வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறம்நிலாமே குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன் தேவியும் தானும்வந் தெம்மையாளச் செம்பொன்செய் சுண்ணம் இடித்தும்நாமே. பதப்பொருள் : பூ இயல் வார்சடை - அழகு பொருந்திய நீண்ட சடையையுடைய, எம் பிராற்கு - எம் பெருமானுக்கு, திருப்பொன் சுண்ணம் இடிக்க வேண்டும், அழகிய பொற் சுண்ணத்தை இடிக்க வேண்டும், மாவின் வடு வகிர் அன்ன - மாம்பிஞ்சின் பிறவை ஒத்த, கண்ணீர் - கண்களையுடைய பெண்களே, வம்மின்கள் - வாருங்கள், வந்து உடன் பாடுமின்கள் - வந்து விரைவிற்பாடுங்கள், தொண்டர் புறம் நிலாமே - அடியார்கள் வெளியே நில்லாதபடி, கூவுமின் - அவர்களை அழையுங்கள், குனிமின் - ஆடுங்கள், தொழுமின் - வணங்குங்கள், எங்கோன் - எமது இறைவனாகிய, எம் கூத்தன் - எம் கூத்தப்பிரான், தேவியும் தானும் வந்து - இறைவியும் தானுமாய் எழுந்தருளி வந்து, எம்மை ஆள - எம் வழிபாட்டை ஏற்று எம்மை அடிமை கொள்ளும்பொருட்டு, செம்பொன் செய் சுண்ணம் - செம்பொன்போல ஒளி விடும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம். விளக்கம் : இறைவன் பூசுதற்குரிய பொடியை இடித்தற்கு எல்லோரையும் அழைத்து உடன் பாட வேண்டுவாள், ‘வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்’ என்றாள். அதற்குரிய பயன் இறைவன் அருளேயாதலால், ‘தேவியும் தானும் வந்தெம்மையாள’ என்றாள். இதனால், இறைவனுக்குரிய வழிபாடு கூறப்பட்டது. 2 சுந்தர நீறணிந் தும்மெழுகித் தூயபொன் சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும் எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
|