பதப்பொருள் : உலக்கை எல்லாம் - உலக்கைகளுக் கெல்லாம், காசு அணிமின்கள் - மணிவடங்களைக் கட்டுங்கள், கறை உரலை - கருமை நிறமுள்ள உரல்களுக்கு, காம்பு அணிமின்கள் - பட்டுத்துணியைச் சுற்றுங்கள், நேசம் உடைய அடியவர்கள் - இறைவனிடத்து அன்புடைய அடியவர்கள், நின்று நிலாவுக என்று - நிலைபெற்று விளங்குக என்று, வாழ்த்தி - வாழ்த்தி, தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் - உலகமெல்லாம் புகழ்ந்து கொண்டாடுகின்ற, கச்சித்திருவேகம்பன் - காஞ்சி மாநகரிலுள்ள திருவேகம் பனது, செம்பொன் கோயில் பாடி - செம்பொன்னால் செய்யப்பட்ட திருக்கோயிலைப் பாடி, பாச வினையை - தளையாகிய இரு வினைகளை, பறித்து நின்று - நீக்கி நின்று, பாடி - திருவருளைப் பாடி, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம். விளக்கம் : காம்பு - பட்டின் வகை. ‘காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும்’ என்ற சுந்தரர் வாக்கைக் காண்க. ‘கருங்கல்லாற் செய்யப்பட்ட உரல்’ என்பார், ‘கறையுரல்’ என்றார். அடியார்களிடத்திலும், ஆலயத்திலுமே இறைவன் விளக்கமுற்றிருக்கின்றானாதலின், உயிர்கள் உய்தற்பொருட்டு அவை வாழ வேண்டும் என்பார், ‘நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தி’ என்றும், ‘திருவேகம்பன் செம்பொற் கோயில்பாடி’ என்றும் கூறினார். ‘மாலற நேயமும் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரனெனத் தொழுமே’ என்ற சிவஞான போதச் சூத்திரத்தையும் ஒப்பு நோக்குக. இதனால், அடியாரையும், ஆலயத்தையும் வாழ்த்த வேண்டும் என்பது கூறப்பட்டது. 4 அறுகெடுப் பார்அய னும்அரியும் அன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர் கணங்களெல்லாம் நம்மிற்பின் பல்ல தெடுக்கவொட்டோம் செறிவுடை மும்மதில் எய்தவில்லி திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற் காடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே. பதப்பொருள் : அயனும் அரியும் - பிரமனும் திருமாலும், அறுகு எடுப்பார் - அறுகெடுத்தலாகிய பணியைச் செய்வார், அன்றி - அவர்களைத் தவிர, மற்று - ஏனையோராகிய, இந்திரனோடு அமரர் - இந்திரன் முதலிய வானுலகத்தவர்களும், நறுமுறு தேவர் கணங்களெல்லாம் - முணுமுணுக்கின்ற தேவ கணங்களும், நம்மின் பின்பு அல்லது - நமக்குப் பின்
|